மேலும் செய்திகள்
டோலி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
04-Dec-2024
சபரிமலை : பக்தர்களின் எடைக்கு ஏற்ப டோலி கட்டணத்தை நிர்ணயிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மூன்று பிரிவுகளாக எடையை நிர்ணயத்து கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை பம்பையிலிருந்து சபரிமலை சன்னிதானத்துக்கு அழைத்து செல்ல டோலி பயன்படுத்தப்படுகிறது. தற்போது பம்பை முதல் சன்னிதானம் செல்ல ரூ. 3250 கட்டணம் உள்ளது. சென்று திரும்ப கட்டணம் ரூ.6500 ஆகும். ஆனால் டோலி தொழிலாளர்கள் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.இதையடுத்து ப்ரீபெய்டு டோலி சிஸ்டத்தை கொண்டு வர தேவசம் போர்டு முடிவு செய்து பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் இதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். ப்ரீபெய்டு டோலி கொண்டு வரும் பட்சத்தில் தங்களின் கட்டணத்தை உயர்த்தவும் அவர்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில் பக்தர்களின் எடைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிப்பது என தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல மட்டும் 80 கிலோ வரை ரூ.4250, 80 முதல் 100 கிலோ வரை ரூ.5250, 100 கிலோவுக்கு மேல் ரூ.6250 என கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணத்தில் ரூ.250 தேவசம்போர்டுக்கு செலுத்த வேண்டும். சென்று திரும்ப கட்டணம் இரு மடங்காகும். இதன் மூலம் ரூ.2000 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.இச்சேவை தொடங்குவதற்காக சன்னிதானம் பெரிய நடை பந்தலில் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., கவுன்டர் அருகிலும் நீலிமலை கார்டியாலஜி சென்டர் அருகேயும், பம்பையில் செழிக்குழி பகுதியிலும் மூன்று கவுன்டர்கள் திறக்கப்பட உள்ளன.இந்த கவுன்டர்களில் மட்டுமில்லாமல் ஆன்லைனிலும் டோலி முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம் டோலி சேவையில் ரூ.ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை கட்டணம் அதிகரிக்கும்.எனினும் ஏமாற்ற முடியாது என்பதால் இத்திட்டத்திற்கு பக்தர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய டிக்கெட்டுகள் அச்சடித்து வந்ததும் இத்திட்டம் துவங்கும் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
04-Dec-2024