காளிந்தி குஞ்ச் சந்திப்பில் போக்குவரத்து முன்னெச்சரிக்கை
மதன்பூர்:டில்லி - மும்பை விரைவுச்சாலை பணிகள் காரணமாக காளிந்தி குஞ்ச் சந்திப்பில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் என்று டில்லி காவல் துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:டில்லி - மும்பை விரைவுச் சாலையின் பணிகள், ஆக்ரா கால்வாய் சாலையில் பாலம் ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக காளிந்தி குஞ்ச் சந்தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், காளிந்தி குஞ்ச் சந்திப்பை வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பரிதாபாத்தில் இருந்து நொய்டாவுக்குச் செல்லும் பயணியர், நெரிசல் மிகுந்த பகுதியைக் கடந்து செல்ல, மதுரா சாலை மற்றும் 13வது சாலையை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல் நொய்டாவில் இருந்து டில்லிக்கு வருபவர்கள், டி.என்.டி., மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.காளிந்தி குஞ்ச் சந்திப்பின் சுற்றுப்புறங்களில் சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.