வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கதி சக்திக்கீ சாதனை ஹை..
உத்தர கன்னடா: கர்நாடகாவில் காய்கறிகள், பழங்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில், அதில் பயணித்த வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், சாவனுாரை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் 25 பேர், நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய, உத்தர கன்னடா மாவட்டம், கும்டாவுக்கு, மினி லாரியில் கிளம்பினர்.நேற்று அதிகாலை 5:00 மணியளவில், உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடர்ந்த பனி மூட்டம் காரணாக, அவ்வழியாக சென்றவர்களுக்கு தெரியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பின், லாரி கவிழ்ந்திருப்பதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த போலீசார், கிரேன் வாயிலாக லாரியை அப்புறப்படுத்திய போது, காய்கறிகள் மூட்டைகளின் அடியில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது தெரிந்தது.இதில், பயாஸ் ஜம்கண்டி, 45, வாசிம் முடகேரி, 35, இஜாஸ் முல்லா, 20, சாதிக் பாஷா, 30, குலாம் ஹுசேன், 40, இம்தியாஸ் முலகேரி, 36, அல்பாஸ் ஜபர், 25, ஜிலானி அப்துல் ஜகடி, 25, அஸ்லாம் பாபுலி பென்னி, 24, ஜலால் தாரா, 30, ஆகிய 10 பேர் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது.மேலும், லாரியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ௫௦ அடி பள்ளம்
சம்பவ இடத்தை பார்வையிட்ட உத்தர கன்னடா எஸ்.பி., நாராயண் கூறுகையில், ''அடர்ந்த பனி மூட்டம் காரணமாக, பின்னால் வந்த வாகனத்துக்கு வழி விட இடதுபக்கம் திரும்பும் போது, சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியில் பயணித்தவர்கள் மீது காய்கறிகள், பழங்கள் மூட்டைகள் விழுந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்,'' என்றார்.காயமடைந்தவர்களை காலை 6:30 மணிக்கு கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, டியூட்டி டாக்டர்கள் யாரும் இல்லை. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், டாக்டர் இல்லாதது கண்டு அதிருப்தி தெரிவித்தனர்.'விபத்தில் காயமடைந்த நேரத்திலும் கூட, சிகிச்சை அளிப்பதை விட, விண்ணப்பம் பூர்த்தி செய்து, ஆதார் அடையாள அட்டை காண்பியுங்கள் என்கின்றனர். முக்கியஸ்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்றால் உடனடியாக சிகிச்சை அளிக்கின்றனர்' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இறுதி ச்சடங்கு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, ஷிகாவி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யாசிர் அகமது பதான் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கினார். விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.ஹாவேரி கூடுதல் எஸ்.பி., லட்சுமண், சாவனுாருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஒரே ஊரை சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததால், அப்பகுதியினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இறந்தவர்களுக்கு நேற்று இரவு இறுதி சடங்கு நடந்தது.
ஆந்திராவின் மந்த்ராலயா மடத்திற்கு சொந்தமான கல்லுாரியில் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்கள் 13 பேர் நேற்று முன்தினம் இரவு, மந்த்ராலயாவில் இருந்து, கர்நாடகாவின் ஹம்பி நரஹரி கோவிலுக்கு ஜீப்பில் சென்றனர்.ஜீப்பை டிரைவர் சிவா, 24 ஓட்டினார். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் ராய்ச்சூர் சிந்தனுார் அரகிநமரா கேம்ப் பகுதியில் ஜீப் சென்ற போது முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சிவா, ஆர்யவர்த்தன், 18, சுசீந்திரா, 22, அபிலாஷ், 20 ஆகிய மாணவர்கள் இறந்தனர். பத்து மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் சித்தராமையா, தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:உத்தர கன்னடா, ராய்ச்சூரில் நடந்த இரு விபத்துகளில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். படுகாயம் அடைந்தோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். வேகம், அஜாக்கிரதையே விபத்துகளுக்கு காரணம். எனவே, ஓட்டுநர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்ட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் குமாரசாமி, பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை உட்பட அரசியல் தலைவர்கள் பலரும், உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பத்திற்கு, சமூக வலைதளம் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.'லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்' என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கதி சக்திக்கீ சாதனை ஹை..