உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு கோடி மரங்களை நட்ட மர மனிதர் காலமானார்

ஒரு கோடி மரங்களை நட்ட மர மனிதர் காலமானார்

ஹைதராபாத்: தெலுங்கானாவில், ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டவரும், 'மர மனிதர்' என மக்களால் அழைக்கப்பட்டவருமான, ராமையா, 87, மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.தெலுங்கானாவில் கம்மம் மாவட்டத்தின் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. மண்பாண்ட தொழிலாளியான இவருக்கு, சிறுவயதில் இருந்தே மரம் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. போதிய கல்வியறிவு இல்லை என்றாலும், தன் வாழ்நாளில் 1 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றிக் காட்டியவர்.இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'மரங்களை காப்போம்; நம்மை மரங்கள் காக்கும்' என்ற வாசகத்துடன் கூடிய பலகையை தன் கழுத்தில் மாட்டியபடி வெளியே செல்வார்.ராமையாவின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவரது மனைவி ஜானம்மாவும் மரக்கன்று நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.ராமையாவின் சமூகசேவையை அங்கீகரிக்கும் வகையில், 2017ல் மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.இந்நிலையில் ராமையா, ரெட்டிப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் நேற்று இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாரத் ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
ஏப் 13, 2025 13:23

சேவை மற்றும் அர்பணிப்பிற்காக ஒரு வணக்கம் .


தமிழன்
ஏப் 13, 2025 01:56

உங்களின் சாதனைக்கு அழிவே கிடையாது நீங்கள் மறைந்தாலும் நட்ட மரங்கள் காற்றை சுவாசிக்க கொடுக்கிறது புனிதமான காரியம் செய்திருக்கிறீர்கள் உங்களுக்கு மறுபிறவியே கிடையாது உங்கள் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறும் ஓம்சாந்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை