மியான்மர் எல்லையில் வேலி அமைக்க பழங்குடியினர் எதிர்ப்பு
கோஹிமா,இந்தோ - மியான்மர் எல்லையில் வேலி அமைப்பதற்கு, நாகாலாந்தைச் சேர்ந்த பழங்குடியினர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர் மாநில எல்லையில் நம் அண்டை நாடான மியான்மரின் எல்லை பகுதி அமைந்துள்ளது. இந்திய - மியான்மர் இடையிலான எல்லை பகுதியில் வசிப்போர், தங்களுக்குள் உறவுமுறை பாராட்டுவது பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது.கடந்த 1950களில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையால், இரு நாட்டு மக்களும் 16 கி.மீ., துாரத்துக்கு விசா இன்றி பரஸ்பரம் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சலுகையை பயன்படுத்தி, மியான்மர் நாட்டில் இருந்து பலர் சட்டவிரோதமாக நம் நாட்டிற்கு ஊடுருவுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்தோ - மியான்மர் எல்லை அமைந்துள்ள 1,643 கி.மீ., துாரத்துக்கு வேலி அமைக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு அறிவித்தார். இதில், வேலி அமைக்கும் பணிகள் 10 கி.மீ.,க்கும் மேலாக நிறைவடைந்துள்ளன.இந்நிலையில், மியான்மர் எல்லையில் வேலி அமைப்பதற்கு நாகாலாந்தின் பழங்குடியினர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அங்காமி, சகேசாங், போச்சுரி, ரெங்மா, ஜெலியாங் ஆகிய ஐந்து பழங்குடியின அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படும், 'டென்யிமி யூனியன் நாகாலாந்து' என்ற அமைப்பு வேலி அமைப்பதற்கு, போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இதன் தலைவர் கெக்வெங்குலோ லியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தோ - மியான்மர் எல்லையில் வேலி அமைப்பது, நாகாலாந்து மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் கலாசார உறவுகளில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும்.வேலி என்பது வெறும் உடல்ரீதியான தடையல்ல, அது நம் அடையாளத்தின் மீதான தடை; இது, இங்குள்ளவர்களின் பாரம்பரியம் மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல்.வேலி அமைப்பதால் மக்களின் பொருளாதாரம் சீர்குலையும்; சமூகங்கள் தனிமைப்படுத்தப்படும். கல்வி மற்றும் சுகாதார பாதுகாப்புக்கான தொடர்புகளை கட்டுப்படுத்தும். எனவே, வேலி அமைக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.