பாலியல் புகாரில் சிக்கும் எதிர்க்கட்சி தலைவர்களால் சிக்கல்!: காங்., அரசுக்கு எதிராக போராட முடியாமல் தவிப்பு
பெங்களூரு: பாலியல் புகாரில் சிக்கும் எதிர்க்கட்சி தலைவர்களால், அக்கட்சிகளின் தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட முடியாமல் தர்மசங்கடத்தில் தவித்து வருகின்றனர்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. ஆட்சிக்கு வந்து 15 மாதங்களில், அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழலால், கண்காணிப்பு அதிகாரி சந்திரசேகர் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மைசூரு மூடாவில் மனைவிக்கு 14 மனைகள் வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.அவர் பதவி விலக கோரி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை, பாதயாத்திரை நடத்தி, எதிர்க்கட்சிகள் கவனத்தை ஈர்த்தன. தொடர் கதை
யாத்கிரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துான்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா பாட்டீல் ஆகியோர் கொடுத்த தொல்லையால், எஸ்.ஐ.,யாக இருந்த பரசுராம் மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அரசின் அனைத்து துறைகளிலும் நடக்கும் ஊழல், கோல்மால் குறித்து தினமும் ஏதாவது, ஒரு தகவல் வெளியே வருகிறது. இதை வைத்து அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்தி, ஆட்சியாளர்களை பதறடிக்க வைக்கும் நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் பாலியல் புகாரில் சிக்குவது தொடர் கதையாகி உள்ளது.லோக்சபா தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் போது, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த, ஊழல் வெளியே வந்தது. அரசுக்கு எதிராக பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில் பார்த்து, முன்னாள் எம்.பி., பிரஜ்வலின் ஆபாச வீடியோ வெளியானது. நான்கு பலாத்கார புகார்களில் அவர் கைது செய்யப்பட்டார்.அவரது தந்தையும், எம்.எல்.ஏ.,வுமான ரேவண்ணாவும், பெண் கடத்தல் வழக்கில் கைதானார். அடுத்த சில நாட்களில் பிரஜ்வலின் அண்ணனும், எம்.எல்.சி.,யுமான சூரஜ் ரேவண்ணாவும், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரேவண்ணாவும், சூரஜும் ஜாமினில் வெளியே உள்ளனர். ஆனால் பிரஜ்வலால் இன்னும் வெளியில் வர முடியவில்லை. வாயடைப்பு
இதற்கிடையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு பதிவானது. தற்போது பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பா.ஜ., முன்னாள் முதல்வர் ஒருவரும், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தங்கள் தொடர்பான, வீடியோக்களை வெளியிட நீதிமன்றத்தில், தடை வாங்கி உள்ளனர்.இப்படி பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் மீது மாறி, மாறி பலாத்கார வழக்குகள், குற்றச்சாட்டுகளில் சிக்குவது, இரு கட்சி தலைமைக்கும் நெருக்கடி அளித்து உள்ளது. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால், பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்களை பற்றி காங்கிரசார் பேசி, எதிர்க்கட்சிகளை வாயடைத்து விடுகின்றனர்.பா.ஜ., ஒழுக்கமான கட்சி என்று கூறி வரும் அக்கட்சி தொண்டர்களால், தங்கள் கட்சி தலைவர்கள் பலாத்கார வழக்குகளில் சிக்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி நிற்கின்றனர். காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட முடியாமல், எதிர்க்கட்சிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட காங்கிரஸ், இனி நம்மை கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற, மனப்பான்மையில் நடந்து வருகிறது.அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்றால், தங்கள் மீது எந்த குறையும் இல்லாத மாதிரி, எதிர்க்கட்சி தலைவர்கள் பார்த்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதை தொண்டர்களும் வலியுறுத்துகின்றனர். இனிமேலாவது தலைவர்கள் விழித்து கொள்வரா என்பதை, பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.