பால் டேங்கரில் பீஹாருக்கு மது கடத்திய இருவர் கைது
காஜிப்பூர்: உத்தர பிரதேசத்தில் இருந்து பால் டேங்கர் லாரியில், பீஹாருக்கு மது கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். உ.பி.,யின், கோரக்பூர் - வாரணாசி நெடுஞ்சாலையில் மா என்ற பகுதியில் நேற்று பால் டேங்கர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதை வழிமறித்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது டேங்கரின் உள்ளே ரகசிய அறை அமைத்து, 173 பெட்டிகளில் சாராயமும், எட்டு பெட்டிகளில் விஸ்கியும் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய்.இது, உ.பி.,யின் காஜிப்பூரில் இருந்து மதுவிலக்கு அமலில் உள்ள பீஹாருக்கு லாரியில் கடத்தி செல்லப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டதாக லாரியில் வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பீஹாரின் பக்சார் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள பார்கோடுகளை சோதனையிட்டனர். அப்போது அவை உ.பி.,யின் காஜிப்பூர் கடைகளில் வாங்கப்பட்ட மதுபானம் என்பது தெரியவந்தது. இந்நிலையில், தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.