ஜோதிடர் கொலையில் இருவருக்கு ஆயுள்
மூணாறு:கேரளா, மூணாறு அருகே மறையூர் பாபுநகரைச் சேர்ந்தவர் ஜோதிடர் மாரியப்பன், 70. இவர் 2020 பிப்.,23ல் ஜோதிடம் தொடர்பாக தமிழகம் சென்று விட்டு திரும்பினார். அன்றிரவு பாபுநகரில் தனியாக வசித்த அன்பழகன் 69, வீட்டில் தங்கினார். அங்கு எருமேலி சாந்திபுரத்தைச் சேர்ந்த மிதுன் 30, உடனிருந்தார். இரவில் மூவரும் மது அருந்திய நிலையில் போதையில் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மிதுன், அன்பழகன் ஆகியோர் மாரியப்பனை பலமாக தாக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்து உடலை சாக்கு மூடையில் கட்டி அருகில் உள்ள ஓடையில் வீசினர்.அந்த வழியாக பிப்., 24 காலை சென்றவர்கள் இதை கவனித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். மறையூர் போலீசார் விசாரித்து மிதுன், அன்பழகனை கைது செய்தனர். தொடுபுழா மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் மிதுன், அன்பழகனுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சசிகுமார் தீர்ப்பளித்தார்.