உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரான்ஸ் சிறையில் இரு இந்தியர்கள்; மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை

பிரான்ஸ் சிறையில் இரு இந்தியர்கள்; மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை

திருவனந்தபுரம்: போதைப்பொருள் வழக்கில் சிக்கி பிரான்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனரை மீட்கக் கோரி குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்துள்ள கும்பலங்கி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்,42. இவர் கடந்த 2019ம் ஆண்டு ஸ்லோவேக்கிய நாட்டில் கண்டெய்னர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். 2022ம் ஆண்டு யாராஸ் ஏர் கார்கோ டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது, ஸ்லோவேக்கியாவில் பணியாற்றி வந்த சக மலையாளி ஷாஜியையும் அதே நிறுவனத்தில் பணிக்கு சேர்த்து விட்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி ஸ்பெயினில் இருந்து இத்தாலியை நோக்கி, சரக்குகளை எடுத்துக் கொண்டு கண்டெய்னர் லாரியை இருவரும் இயக்கிச் சென்றுள்ளனர். அப்போது, பிரான்ஸின் பிரிஜூஸூல் சென்று கொண்டிருந்த போது, அவர்களது வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்துள்ளனர். அதில், 147 கிலோ கோகைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், மார்செய்ல் சிறையில் அடைத்துள்ளனர். வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் தொலைபேசியில் பேச வழங்கப்படும் வாய்ப்பை பயன்படுத்தி, ஜோசப் நடந்த சம்பவத்தை, கேரளாவில் வசித்து வரும் தனது மனைவி ரியாவிடம் கூறியுள்ளார். கண்டெய்னரில் போதைப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஜோசப் மற்றும் ஷாஜி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வசித்து வரும் இருவரையும் மீட்டுத் தரும்படி கேரள எம்பிக்கள் மத்திய அமைச்சர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் பேசி வரும் எம்பி ஹைபி ஈடன் கூறுகையில், 'நாங்கள் இந்த விவகாரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறோம். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு காரணமாக வழக்கு சிக்கலானது,' என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ