உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் இருவர் வீர மரணம் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு

ஜம்மு - காஷ்மீரில் இருவர் வீர மரணம் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு

சண்டிகர்:ஜம்மு- - காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், வீர மரணம் அடைந்த லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஆகியோரின் இறுதிச்சடங்கும் பஞ்சாப் மாநிலத்தில் அவர்களது சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் நடந்தது. தெற்கு காஷ்மீர் மாவட்டம் அகல் காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் உளவுத்துறை வாயிலாக கிடைத்தது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியை, 1ம் தேதி சுற்றி வளைத்தனர். திருமணம் காட்டுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தபடியே முன்னேறினர். இந்தச் சண்டையில், லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் வீரர் ஹர்மிந்தர் சிங் ஆகிய இருவரும் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தனர். லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் உடல், அவரது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம் சாம்ராலா அருகே மனுபூர் கிராமத்துக்கும், வீரர் ஹர்மிந்தர் சிங் உடல் மண்டி கோபிந்த்கர் அருகே பதின்பூர் கிராமத்துக்கும் நேற்று காலை கொண்டு வரப்பட்டன. இருவரது உடல்களும் முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டன. கடந்த, 2015ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த பிரித்பால் சிங், 28,க்கு கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது. விடுமுறை முடிந்து ஏப்ரல் மாதம் பணிக்குத் திரும்பினார். இந்த மாதம் மீண்டும் விடுமுறையில் ஊருக்கு வருவதாக கூறியிருந்தார். அதேபோல, வீரர் ஹர்மிந்தர் சிங், 26, இன்னும் ஒரு வாரத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு, ஊருக்கு வருவதாக குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். இருவரது இறுதிச் சடங்கிலும் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். முதல்வர் இரங்கல் லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சாம்ராலா தொகுதி எம்.எல்.ஏ., ஜக்தார் சிங் தியால்புரா, “பஞ்சாப் மாநில அரசு இரு வீரர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும். ''பிரித்பால் சிங் துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் தன் கடமையைச் செய்தார். அவரது தியாகம் இளைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்,” என்றார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உட்பட ஏராளமானோர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை