பசுக்களை கொல்லச் சென்ற இரண்டு பேர் சுட்டுப் பிடிப்பு
மீரட்:பசுக்களை வெட்டிக் கொல்லச் சென்றதாகக் கூறப்படும், இரண்டு பேர், கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டனர்.உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பபுண்டா அவுட் போஸ்ட் அருகே, போலீசார் வழக்கமான வாகன சோதனை நடத்தினர். பதிவு எண் இல்லாத பைக்கில் வந்த மூன்று பேரை, வண்டியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அவர்கள் வண்டியை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் விரட்டிய போது துப்பாக்கியால் சுட்டனர்.போலீஸ் கொடுத்த பதிலடியில், இருவர் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. பைக்குடன் சரிந்து மூவரையும் போலீசார் சுற்றிவளைத்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடினார்.காலில் குண்டு பாய்ந்த லிசரிகேட் ஷாருக் மற்றும் பிப்ளிகேடா லியாகத் ஆகிய இருவரையும் கைது செய்து, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் அறுவைச் சிகிச்சை செய்து துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது.இருவரிடம் இருந்தும், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், மாடுகளைக் கொல்லும் கருவிகள் மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பசுக்களைக் கொல்லச் சென்றதாக ஒப்புக் கொண்ட இருவரும், அந்த பைக்கையும் திருடி வந்ததாக வாக்குமூலம் அளித்தனர். தப்பிச் சென்ற அவர்களின் கூட்டாளியை தேடி வருகின்றனர்.