போபால்: யூனியன் கார்பைட் கழிவுகளை மறுசுழற்சி செய்ய எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேர் தீக்குளித்து தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள, 'யூனியன் கார்பைட்' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிச., 23ல், விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5,479 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, உடல் உறுப்புகளை இழந்து நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மூடப்பட்டுள்ள இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், உடனடியாக அந்த கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில், இந்துாருக்கு அருகே உள்ள பீதாம்புரில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்தில், இந்தக் கழிவுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முழு பாதுகாப்புடன் போபாலில் இருந்து பிதாம்பூர் என்ற இடத்திற்கு 12 கண்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், 'யூனியன் கார்பைட்' கழிவுகளை எரித்து அழித்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி, பீதாம்பூரில் இன்று பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நகர் பகுதிகளில் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக சொல்லயுள்ளனர். ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 'இந்த விவகாரத்தில் அரசு மிகவும் கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்' என்று மாவட்ட கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.