ம.பி.,யில் தேடப்பட்டு வந்த இரு பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை
போபால் : மத்திய பிரதேசத்தில் தலா 14 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்புடன் தேடப்பட்டு வந்த இரு பெண் நக்சல்கள் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுதும் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் அவர்களை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், மத்திய பிரதேசத்தின் கன்ஹா தேசிய பூங்காவை ஒட்டிய முன்டிதாதர் - கனேரிதாதர் - பர்சடோலா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் முகாமிட்டு உள்ளதாக அம்மாநில பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் இறுதியில், பெண் நக்சல்கள் இருவர் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும், தலா 14 லட்சம் ரூபாய் அறிவிப்புடன் தேடப்பட்டு வந்த நக்சல்கள் என பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் ஒருவர், மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் முர்குடியைச் சேர்ந்த அமதா அல் ரமாபாய் என்றும், மற்றொருவர் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் பாலிகுதேமைச் சேர்ந்த பிரமிளா என்பதும் தெரியவந்துள்ளது. இங்கு கடந்த ஒன்றரை மாதங்களில் நடந்த இரண்டு என்கவுன்டர்களில், ஆறு நக்சலைட்டு கள் கொல்லப்பட்டுஉள்ளனர்.