உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய கடற்படைக்கு வலு சேர்க்கும் இரு போர் கப்பல்கள் சேவையில் இணைந்தன

இந்திய கடற்படைக்கு வலு சேர்க்கும் இரு போர் கப்பல்கள் சேவையில் இணைந்தன

விசாகப்பட்டினம்: ஐ.என்.எஸ்., உதயகிரி மற்றும் ஐ.என்.எஸ்., ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நம் கடற்படையில் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் கடற்படையின் பலம் அதிகரித்துள்ளது. 'பி - 17ஏ' என்றழைக்கப்படும், 'பிராஜெக்ட் - 17 ஆல்பா' திட்டத்தின் கீழ், ஐ.என்.எஸ்., உதயகிரி மற்றும் ஐ.என்.எஸ்., ஹிம்கிரி நவீன போர்க்கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு நாட்டுக்கு நேற்று அர்ப்பணிக்கப்பட்டன. நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9hwxsgwv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இரு கப்பல்களும் போர்க்களத்தில் எதிரிகளின், 'ரேடார்' கண்களில் மண்ணை துாவும் வகையிலான, 'ஸ்டெல்த்' ரகத்தைச் சேர்ந்தவை. 75 சதவீத அளவுக்கு இந்திய பொருட்களை வைத்து இரு போர்க்கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளதால், ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு கொண்ட நாடாக உயர வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கும் வலு சேர்த்துள்ளது. வெவ்வேறு கப்பல் கட்டும் தளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இரு போர்க்கப்பல்களும் ஒரே சமயத்தில் நம் கடற்படையில் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை. இதில், ஐ.என்.எஸ்., ஹிம்கிரி போர்க்கப்பல், கொல்கட்டாவில் உள்ள, 'கார்டன் ரீச்' கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது. ஐ.என்.எஸ்., உதயகிரி போர்க்கப்பல், மும்பையில் உள்ள, 'மஸகான் டாக்' கப்பல் கட்டும் தளத்தில் உருவானது.

இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கை:

இந்த இரு கப்பல்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மற்றும் சென்சார் அமைப்புகள் மூலம் கடல்சார் போர்களை முழு பலத்துடன் எதிர்கொள்ள முடியும். இரு கப்பல்களின் இணைப்பால் கடற்படையின் பலம் அதிகரித்துள்ளது. போர்க்கப்பல்கள் வகையில் உதயகிரி மிக வேகமாக பயணிக்கும் ஆற்றல் படைத்தது. நவீன கட்டுமான முறைகளை கையாண்டதே இதற்கு காரணம். இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு பணிக்காக இரு போர்க்கப்பல்களும் இனி ஈடுபடும். இதற்கு முன் இருந்த ஷிவாலிக் வகை போர்க்கப்பல்களை விட, இரு போர்க்கப்பல்களும் 5 சதவீதம் அளவுக்கு பெரியது; தலா 6,700 டன் எடை கொண்டது. உதயகிரி போர்க்கப்பலின் நீளம் 149 மீட்டர்; மணிக்கு 28 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும். அதாவது ஒரு மணி நேரத்தில் 52 கி.மீ., துாரம் செல்லக்கூடியது. எட்டு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், 48 'பாரக் - 8' வகை ஏவுகணைகளை சுமந்து சென்று, எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது. உதயகிரி போர்க்கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் இரு ஹெலிகாப்டர்களை இயக்க முடியும். டீசல் இன்ஜின்கள் மற்றும் கேஸ் டர்பைன்கள் மூலம் இயங்கும். ஐ.என்.எஸ்., ஹிம்கிரி போர்க்கப்பலும் இதே சிறப்பம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. நீர்மூழ்கி கப்பல்களின் தாக்குதலை எதிர்க்கும் வல்லமை கொண்டவை; அதற்கேற்றபடி நீர்மூழ்கி கப்பல் தடுப்பு அமைப்பு இரு போர்க்கப்பல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. இரு போர்க்கப்பல்களையும் கட்டுமானம் செய்ததன் மூலம், 200 சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு வேலை கிடைத்தது. குறிப்பாக, 4,000 பேர் நேரடியாகவும், 10,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்: * இரு போர்க்கப்பல்கள் வெவ்வேறு கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்பட்டு, ஒன்றாக கடற்படையில் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை * ஒரே மாதிரியாக மிகப் பெரிய போர்க்கப்பல்களை, வெவ்வேறு கட்டுமான தளத்தில் இருந்து உருவாக்க முடியும் என்பது இதன் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது * ஐ.என்.எஸ்., உதயகிரி போர்க்கப்பல் வெறும் 37 மாதங்களில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது * கப்பலின் முழு எலும்புக்கூடும் ஒரே பகுதியை வைத்து கட்டுவது தான் வழக்கம். ஆனால், முதல் முறையாக தனித்தனி பகுதிகளை கொண்டு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு இரு போர்க்கப்பல்களும் கட்டப்பட்டுள்ளன * 'பி - 17ஏ' வகையைச் சேர்ந்த ஐ.என்.எஸ்., நீல்கிரி கடந்த ஜனவரியில் சேவைக்கு வந்தது. அதற்கு அடுத்த சில மாதங்களுக்குள் உதயகிரியும், ஹிம்கிரியும் நேற்று சேவைக்கு வந்தன. இதன் மூலம், ஒரே ஆண்டில் மூன்று போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன * எட்டு பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது. அதே சமயம் மேலும் எட்டு ஏவுகணைகளை இரு போர்க்கப்பல்களிலும் பொருத்த முடியும் * இரு போர்க்கப்பல்களிலும் நவீன ரக ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலின் ரேடார், ஸ்பெயினின் வான் கண்காணிப்பு ரேடார், இந்தோ - ரஷ்ய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், இந்தோ - இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் இந்த இரு போர்க்கப்பல்களுக்கும் பலம் சேர்க்கும் வகையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kumaran
ஆக 27, 2025 06:30

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு திரு மோடிஜி ஆட்சியில் மிகச்சிறந்த வளர்ச்சி, கடந்த 60 வருட காலங்களை வெறுமனே கழித்தது வேதனைக்குறியது. மக்களிடம் புரிதல்கள் வேண்டும் தவறு செய்பவர்களுக்கு பரிந்து பேசுவது நமக்கு நாமே செய்யும் தீங்காகும்.


Kasimani Baskaran
ஆக 27, 2025 03:50

சிறப்பு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை