ஆட்சியே மாறினாலும் இவர் அமைச்சர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலகல
நாக்பூர், 'மத்தியில் நான்காவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்குமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால், ராம்தாஸ் அத்வாலே அமைச்சராக வருவார் என்பது மட்டும் நிச்சயம்,'' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கிண்டலாக குறிப்பிட்டார். 'மஹாயுதி' கூட்டணி
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் குடியரசு கட்சியும் அங்கம் வகிக்கிறது.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, தற்போதே தேர்தல் பணிகளை கட்சிகள் துவங்கிவிட்டன. சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சட்டசபை தேர்தலில், மஹாயுதி கூட்டணி சார்பில் போட்டியிடுவோம். 10 - 12 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.மத்தியில் அடுத்த முறையும் பா.ஜ., ஆட்சி அமையும். மோடி தான் பிரதமராவார்' என்றார். நகைச்சுவை
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி பங்கேற்றார். இதில், மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவும் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர் கட்கரி பேசியதாவது:மத்தியில் நான்காவது முறையாக, எங்கள் அரசு மீண்டும் அமையுமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால், ராம்தாஸ் அத்வாலே மட்டும் அமைச்சராக வருவார் என்பது மட்டும் நிச்சயம். இதை நகைச்சுவையாக குறிப்பிடுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.பிரதமர் மோடி தலைமையிலான அரசில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம்தாஸ் அத்வாலே அமைச்சராக பதவி வகிக்கிறார். இதை கிண்டலடிக்கும் வகையில் கட்கரி பேசியது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.