| ADDED : நவ 06, 2025 10:30 AM
கோல்கட்டா:மேற்கு வங்கத்தின் மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தரின் பாதுகாப்பு வாகனம் மீது ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடியா மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜூம்தர் காரில் சென்று கொண்டிருந்தார். நபாத்விப் பகுதி அருகே ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜவினர் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை மடக்கி திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கார் பலத்த சேதடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தர் கூறுகையில், 'குடிபோதையில் இருந்த சில திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆளும் கட்சி ஆதரவு பெற்ற குண்டர்களால் பல பாஜக தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதில், பலர் காயமடைந்துள்ளனர்,' எனக் கூறினார். ஆனால், மத்திய அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து நபாத்வீப் நகராட்சியின் தலைவர் பிமான் சாஹா கூறியதாவது; பாஜ ஆதரவாளர்கள், திரிணமுல் காங்கிரஸின் தொழிற்சங்க அமைப்பான ஐஎன்டிடியுசி அலுவலகத்தை தாக்கியதால் பதற்றம் உண்டானது. இதனைக் கண்டித்து பஸ் ஸ்டேன்ட் அருகே தங்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது பாஜவினரால் மீண்டும் தாக்கப்பட்டனர். இதனால், இருதரப்பினரிடையே கைகலப்பு உருவானது, என்றார்.