லக்னோ, பிப். 15-உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மஹா கும்பமேளா பற்றி தவறான செய்திகளை வெளியிட்டதாக, 53 சமூக ஊடகங்கள் மீது அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.மஹா கும்பமேளாவில் இதுவரை, 50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இந்த நிகழ்வு குறித்து, பல ஆயிரம் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் சிறப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. நடவடிக்கை
அதே நேரத்தில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த நிகழ்வில், அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததாக, சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன.இதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரையின்படி, உ.பி., மாநில டி.ஜி.பி., பிரஷாந்த்குமார் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:கும்பமேளா நிகழ்வை வேண்டுமென்றே தவறாக சித்தரித்த, 53 சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வேண்டுமென்றே தவறான செய்திகளை வெளியிட்ட அந்நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. எகிப்து நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தை, கும்பமேளா அரங்கில் நடந்தது போல காட்டிய சில சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேபாள நாட்டில் நடந்த நெரிசலில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல முடியாமல், ஆற்றில் வீசி செல்வது போன்ற காட்சிகளை காட்டி, கும்பமேளா பக்தர்களை அச்சமூட்டியுள்ளனர். விசாரணை
பீஹாரின் பாட்னா நகரில் நடந்த திரைப்பட விழாவில் அரங்கேறிய செருப்பு வீச்சு சம்பவத்தை, கும்பமேளாவில், ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்டது போல காட்டிய சமூக ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இறந்தவர்களின் உடல்களில் இருந்த முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்டு, அந்த உடல்கள் ஆற்றில் வீசப்படுவது போன்ற காட்சிகளை வேண்டுமென்றே காட்டிய சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்.எனவே, அந்த ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; சட்டப்படி தொடர்ந்து விசாரணையும் நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.