| ADDED : செப் 24, 2025 02:36 AM
காஜியாபாத்: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா, 22, என்பவர் மீது பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு உ.பி.,யின் காஜியாபாதில் திருட்டு ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அங்கு சோதனைச்சாவடி பணியில், பெண் போலீஸ் குழு ஈடுபட்டு இருந்தது. அவர்கள் ஜிதேந்திராவிடம் வண்டியை நிறுத்தும் படி கூறினர். ஆனால், அவர் நிற்காமல் தப்பிச் சென்றார். அவரை மகளிர் போலீஸ் குழுவினர் விரட்டிச் சென்றனர். ஒரு கட்டத்தில் ஸ்கூட்டரில் இருந்து ஜிதேந்திரா கீழே விழுந்தார். அவரை சரணடைய சொன்ன போது, போலீசாரை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இதனால் மகளிர் போலீசார் பதிலுக்கு சுட்டனர். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசார், சிகிச்சை முடிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.