உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தராகண்ட் வெள்ள பாதிப்பு; சமச்சீரான கொள்கை அவசியம்!

உத்தராகண்ட் வெள்ள பாதிப்பு; சமச்சீரான கொள்கை அவசியம்!

உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், கடந்த செவ்வாயன்று மேகவெடிப்பு காரணமாக குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்து திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கியவர்களை மீட்கும் பணி ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதுவரை, 300க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக, உத்தராகண்ட் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த பேரிடரில் நான்கு பேர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட் டோரை காணவில்லை. இப்பகுதியில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதுடன், சாலைகள், பாலங்கள் போன்றவையும் சேதம் அடைந்துள்ளதால், அவற்றை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. அந்தப் பகுதிகள் எல்லாம் மண் மேடுகள் மற்றும் சகதியாக உள்ளன. பாதிப்புகளின் அளவை மதிப்பிட சில நாட்களாகும் என, மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தின் பெரும் பகுதிகள், இமயமலையின் சரிவான தென்பகுதியில் அமைந்துள்ளன. அத்துடன், இப்பகுதிகள் தொடர்ந்து மழை பெறும் பகுதிகளாகும். அதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், இவை அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றன. மலைப்பகுதிளில் உள்ள சிறிய ஓடைகள் கூட மழைக்காலங்களில் பெருக்கெடுத்து, பாதை மாறி, ஆபத்தானதாக மாறிவிடுகின்றன. இங்கு, கடந்த செவ்வாயன்று நடந்த சம்பவம் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவையும், அதனால் பல உயிர்கள் பலியானதையும் நினைவுபடுத்துவதாக உள்ளது. உத்தராகண்ட் மாநிலம், 2013 முதல் தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 2013ல் கேதார்நாத் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், பல கிராமங்கள் அழிந்ததுடன், 5,000த்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. தாராலி கிராமம் இருக்கும் உத்தரகாசி மாவட்டத்தின் பல பகுதிகளில், ஒரு வாரத்திற்கும் மேலாகவே தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தாலும், மேகவெடிப்பால் பெருமழை பெய்ததால், கிராமமே காணாமல் போகும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது என்பதே உண்மை. சுற்றுலாவை விரிவுபடுத்தும் ஆர்வத்தில் உள்ள மத்திய அரசும், உத்தராகண்ட் மாநில அரசும், இந்தப் பகுதிகள் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடியவை என்பதை உணர்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அத்துடன், சூழல் ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்றாததுடன், அந்த விதிமுறைகளை அமல்படுத்துவதை கண்காணிக்கும் குழுவினர், எச்சரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவே தெரிகிறது. இமயமலையின் சில பகுதிகள் எளிதில் உடையக் கூடியவையாகவும், வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் அழுத்தங்களுக்கு உள்ளாகக் கூடியவையாகவும் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில் கட்டுப்பாடற்ற வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதே, சமீபத்திய பேரழிவுக்கு காரணமாகி விட்டது. எனவே, காலநிலை மாற்றம், இமயமலை பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, பேரிடர் மேலாண்மை அமைப்புகள் உள்ளிட்ட பல அரசு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும். இயற்கையும், மக்களின் வாழ்க்கையும் பாதிக்காத வகையில் சமச்சீரான கொள்கைகளையும், விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும். அவை நிர்ணயிக்கும் கட்டுப்பாடுகள் அடிப்படையிலேயே வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், கடந்த செவ்வாயன்று நடந்தது போன்ற சோக சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tamilan
ஆக 11, 2025 23:02

5000 பேர் போனபிறகும் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. டிரில்லியன் டாலர் எங்கு போய்விட்டது என்றும் தெரியவில்லை


SANKAR
ஆக 11, 2025 22:13

Govt blamed for Wayanad.In Uttarkhand also SAME STORY.why no posts criticising Uttarkhand Govts irresponsible act of allowing construction in danger area?


அப்பாவி
ஆக 11, 2025 10:23

சமச்சீர் கல்வி மாதிரி ஆயிடப் போகுது


புதிய வீடியோ