வாசன் கண் மருத்துவமனை கே.எஸ்.ஆர்.டி.சி., ஒப்பந்தம்
பெங்களூரு: கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடகா போக்குவரத்து கழகத்துடன் வாசன் கண் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.பெங்களூரில் மட்டும் 18 வாசன் கண் மருத்துவமனைகள் உள்ளன. ஒரு நாளைக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனை, தற்போது கர்நாடகா போக்குவரத்து கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.நேற்று, முதல்வர் சித்தராமையா தலைமையில் கையெழுத்தானது. வாசன் கண் மருத்துவமனை இயக்குனர் சுந்தர முருகேசன், ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டார்.இதன்படி, 'கர்நாடக மாநில போக்குவரத்துக்கழக ஆரோக்யா' எனும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் படி, போக்குவரத்து கழகத்தில் வேலை செய்யும் ஊழியர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இலவசமாக, வாசன் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.கண்புரை, கண்ணில் நீர் வழிதல், நீரிழிவால் கண்களில் வரும் பாதிப்பு, கிட்ட பார்வை, கண்ணில் ஏற்படக்கூடிய காயங்கள், கண் நரம்பு பாதித்தல், புற்றுநோயால் வரும் கண் பாதிப்பு, லேசர் சிகிச்சை போன்ற அதி நவீன சிகிச்சை அளிக்கபடுகிறது.