வாகனங்கள், கட்டுமான பணிகளுக்கு... கட்டுப்பாடு! டில்லியில் காற்றின் தரம் மிக மோசம்
புதுடில்லி டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால், 'கிராப் -- 3' எனப்படும் காற்று மாசை தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகளை டில்லி அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய கட்டட பணிகள் தவிர்த்து பிற கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகளால் டில்லியில் காற்று மாசு ஏற்பட்டு, ஒரே புகை மண்டலமாக காணப்படுகிறது. குழந்தைகள், மூத்த குடிமக்கள் பல்வேறு உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்று மாசு காரணமாக நேற்று காலை அடர்ந்த புகை படலம் சூழ்ந்து காணப்பட்டது. 'கிராப் - ௩'
கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக் குறியீடு, 400 என்ற மிக மோசமான அளவை கடந்துள்ளது. 'காற்றின் தரக் குறியீடு இந்த அளவு சரிந்திருப்பது ஆரோக்கியமான மக்களையே பாதிக்கும். 'சுவாச நோய், நுரையீரல் தொற்று போன்றவை இருப்பவர்கள் இன்னும் மோசமான பாதிப்புக்கு ஆளாவர்' என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. டில்லியின் வெப்பநிலையும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவு 16 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு நேற்று குறைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக டில்லி அரசு, 'கிராப் - 3' எனப்படும் காற்று மாசை தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. l மின்சார மற்றும் சி.என்.ஜி., பேருந்துகள் தவிர்த்து பிற மாநில டீசல் பேருந்துகள் டில்லிக்குள் நுழைய தடை l அத்தியாவசியம் இல்லாத கட்டுமான பணிகள் மற்றும் கட்டட இடிப்பு பணிகள் அனைத்துக்கும் தடை. டில்லி சுற்றுவட்டார பிராந்தியத்தில் அத்தியாவசியம் இல்லாத தொழில்துறை சார்ந்த சுரங்க பணிகள் அனைத்துக்கும் தடை l குழந்தைகள் மோசமான காற்றை சுவாசிப்பதை தடுக்க, ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் l முக்கிய சாலைகளில் புழுதியை குறைப்பதற்காக சாலைகளில் லாரிகளை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடிக்க உள்ளனர்l காற்றின் தரம் மேம்பட்டதும் இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும்.
300 விமான சேவைகள் பாதிப்பு
டில்லியில் நேற்று ஏற்பட்ட காற்று மாசு மற்றும் பனி காரணமாக, எதிரில் வருவோரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு, வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தினமும் 1,400 விமானங்களை கையாளும் அளவுக்கு பரபரப்பானது. இங்கு, நேற்று அதிகாலையிலிருந்து 7:00 மணி வரை, வருகை தர இருந்த 115 விமானங்களும், புறப்பட இருந்த 226 விமானங்களும், 15 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதே போல் பிற மாநிலங்களிலிருந்து, டில்லிக்கு நேற்று காலை வந்த 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகின.