உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தன்கருக்கு எதிரான நோட்டீஸ் தள்ளுபடி செய்த துணை தலைவர்

தன்கருக்கு எதிரான நோட்டீஸ் தள்ளுபடி செய்த துணை தலைவர்

புதுடில்லி, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை ராஜ்யசபா தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீசை, துணை தலைவர் ஹரிவன்ஷ் நேற்று தள்ளுபடி செய்தார்.ராஜ்யசபா தலைவராக பதவி வகித்து வரும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.அவர் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டதால் அவரை சபை தலைவர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 60 பேர் கையெழுத்திட்ட நோட்டீஸ், கடந்த 10ம் தேதி பார்லிமென்ட் செயலகத்தில் அளிக்கப்பட்டது.ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் முன், சபையின் செக்ரட்டரி ஜெனரல் பி.சி.மோடி, இந்த நோட்டீசை நேற்று தாக்கல் செய்தார்.அப்போது, அரசியலமைப்பையும், துணை ஜனாதிபதி பதவியையும் இழிவுபடுத்தும் நோக்கில் அளிக்கப்பட்டுள்ள நோட்டீசை தள்ளுபடி செய்வதாக, துணை தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.அதில் இடம் பெற்றுள்ள விபரங்கள் குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:தனிப்பட்ட நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் உண்மைக்கு புறம்பானது, விளம்பர நோக்கம் உடையது. ஜனநாயகத்தையும், துணை ஜனாதிபதி பதவியையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் அளிக்கப்பட்டுஉள்ளது.அரசியலமைப்பு சட்டப்பிரிவு 67பி-யின் படி, பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கு 14 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும்.இந்த குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையும் என்பதை நவம்பர் மாதமே அறிவித்துவிட்டோம்.அப்படி இருக்கையில் இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வர இயலாது. அது தெரிந்தும் துணை ஜனாதிபதியை அவமதிக்கும் நோக்கில் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

கூட்டுக்குழு அமைப்பு

நாடு முழுதும் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை ஜே.பி.சி., எனப்படும், பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்புவதற்கு, லோக்சபா எம்.பி.,க்கள் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 எம்.பி.,க்கள் அடங்கிய பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பா.ஜ., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகுர் மற்றும் பி.பி.சவுத்ரி, எம்.பி.,க்கள் பர்ஷோத்தம் ரூபாலா, சம்பித் பத்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.காங்கிரசின் பிரியங்கா, மணீஷ் திவாரி மற்றும் சுக்தியோ பகத், சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, சமாஜ்வாதியின் தர்மேந்திர யாதவ், திரிணமுல் காங்.,கின் கல்யாண் பானர்ஜி, தி.மு.க.,வின் செல்வகணபதி, தெலுங்கு தேசத்தின் ஹரிஷ் பாலயோகி, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியின் சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ