பாசாங்குத்தனத்தை கைவிடுங்கள் முதல்வருக்கு விஜயேந்திரா அறிவுரை
பெங்களூரு: ''பாசாங்குத்தனத்தை கைவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்,'' என, சித்தராமையாவுக்கு, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அட்வைஸ் செய்துள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:'முடா'வில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலை அம்பலப்படுத்திய சிநேகமயி கிருஷ்ணாவுக்கு என் வாழ்த்துகள். முடா வழக்கை கண்டித்து பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தியது. எங்கள் போராட்டத்தால் முதல்வரின் கை கட்டப்பட்டுள்ளது.முடா வழக்கில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பதன் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் தன் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை சட்டவிரோதமாக வாங்கிக் கொடுத்தது மேலோட்டமாக தெரிகிறது.ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய வீட்டுமனைகளை ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்களுக்கு கொடுத்துள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.சிநேகமயி கிருஷ்ணாவின் குரலை ஒடுக்கும் வேலையை மாநில அரசு செய்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய திட்டமிட்டனர். இனிமேலாவது தனது பாசாங்குத்தனத்தை கைவிட்டு விட்டு, முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். முடா வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.