மேலும் செய்திகள்
கர்நாடக பா.ஜ., கோஷ்டிகளுக்கு மேலிடம் 'டெஸ்ட்'
20-Nov-2024
பெங்களூரு: கட்சியில் தனக்கு எதிராக செயல்படும் பசனகவுடா பாட்டீல் எத்னால் பற்றி, கட்சி மேலிடத்திடம் போட்டுக் கொடுக்க, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா டில்லி சென்றுள்ளார்.கர்நாடக பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, கட்சியின் மாநிலத் தலைவராக உள்ளார்.அவரது தலைமையின் மீது பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, முன்னாள் அமைச்சர்கள் குமார் பங்காரப்பா, அரவிந்த் லிம்பாவளி, முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்., கிண்டல்
விஜயேந்திராவை தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறுவதுடன், அடிக்கடி அவருக்கு எதிராக ஆலோசனை கூட்டமும் நடத்துகின்றனர். குறிப்பாக அவரை எத்னால், கடுமையாக விமர்சிக்கிறார்.வக்பு வாரியம், விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எத்னால் தலைமையில் அதிருப்தி அணி பாதயாத்திரை நடத்துகிறது. இதை வைத்து காங்கிரஸ் கிண்டல் செய்கிறது. இது பா.ஜ., தொண்டர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. ஆதரவு கோஷ்டி
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விஜயேந்திரா திடீரென டில்லி புறப்பட்டுச் சென்றார். கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மேலிட பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் செயல்பாடு பற்றி சொல்லி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலிட தலைவர்களிடம் கோரிக்கை வைக்க உள்ளார்.இதற்கிடையில் விஜயேந்திராவுக்கு ஆதரவாக, பா.ஜ.,வில் ஒரு அணி உருவாகி உள்ளது.முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா தலைமையிலான அணியில், முன்னாள் அமைச்சர்கள் நாகேந்திரா, பி.சி.பாட்டீல், ஹரதாளு ஹாலப்பா, கட்டா சுப்பிரமணிய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர். இவர்கள் நேற்று மைசூரு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்.பின், கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான தொண்டர்கள், 'எத்னால் கட்சிக்கு துரோகம் செய்கிறார். அவரை கட்சியில் இருந்து துாக்கி வீச வேண்டும்' என வலியுறுத்தினர்.பின், ரேணுகாச்சார்யா அளித்த பேட்டி:மக்கள் விரோத காங்கிரசுடன், எத்னால் உள்ஒப்பந்தம் செய்துள்ளார். 'முடா' முறைகேட்டை கண்டித்து நடந்த பாதயாத்திரையில் அவர் பங்கேற்கவில்லை. இதன்மூலம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளார் என்று தெளிவாகி உள்ளது. எத்னாலின் ஆட்டம் நடக்காது.இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து, பா.ஜ.,வை தோற்கடித்தனர். அவரை கட்சியில் இருந்து, துாக்கியெறிய வேண்டும். அவரது ஹிந்துத்வா முகமூடி கழன்றுள்ளது. கட்சிக்குள் உள்ள துஷ்டசக்திகள் சம்ஹாரம் செய்யப்படுவர்; பொறுத்திருந்து பாருங்கள்.பா.ஜ.,மேலிடம் பலவீனமாகவில்லை. காலம் வரும்போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரசுடன் 'மேட்ச் பிக்சிங்' செய்து கொண்டு, முடா முறைகேடு தொடர்பான போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கினர். மிரட்டல்
மறைமுகமாக ஊழலுக்கு ஆதரவளித்துள்ளார். எடியூரப்பாவுக்கு, இத்தகைய சகுனிகள், தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். விஜயேந்திராவை மாநில தலைவராக்கியது, பா.ஜ., மேலிடம் தானே தவிர, எடியூரப்பா அல்ல. அவரை திட்டினால், கட்சி மேலிடத்தை திட்டியது போன்றாகும்.இடைத்தேர்தலில் பா.ஜ., தோல்விக்கு, எத்னாலே காரணம். அவரை எதிர்த்துப் பேசியதால், எனக்கு மிரட்டல் வந்துள்ளது. இதற்கெல்லாம் பணியமாட்டேன்.விரைவில் முருடேஸ்வராவில், ஆலோசனை கூட்டம் நடத்துவோம். அதன்பின் தாவணகெரேவில், பா.ஜ., தலைவர்கள் மாநாடு நடக்கும். இதில் மூன்று முதல் நான்கு லட்சம் மக்கள் சேர்க்கப்படுவர். எத்னாலை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக, கட்சியின் தேசிய தலைவரை சந்திப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
20-Nov-2024