வகுப்பறையில் வாந்தி: தலித் மாணவியை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் விஸ்வரூபம்
மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை அருகே அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில் சக மாணவியின் வாந்தியை, தலித் மாணவியை கொண்டு சுத்தம் செய்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.உடும்பன்சோலை அருகே ஸ்லிபாமலையில் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவிக்கு நவ.,13ல் உடல் நலக்குறைவால் வகுப்பறையில் வாந்தி ஏற்பட்டது. அதனை அதே வகுப்பை சேர்ந்த தலித் மாணவியை சுத்தம் செய்ய ஆசிரியை கூறினார். மறுத்த மாணவியை கட்டாயப்படுத்தி சுத்தம் செய்ய வைத்ததுடன் உதவிக்கு வந்த மாணவியை, ஆசிரியை தடுத்தார். சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறவில்லை என்றபோதும் வேறு மாணவிகள் மூலம் இரு தினங்களுக்கு முன்பு தெரியவந்தது.மாணவியின் தாயார் தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உடும்பன்சோலை போலீஸ், நெடுங்கண்டம் உதவி கல்வி அதிகாரி ஆகியோரிடம் புகார் அளித்தார். தலைமை ஆசிரியை ஆஜராகி விளக்கம் அளிக்க கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார். அப்பிரச்னையில் கல்வி துறை அமைச்சர், மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் ஆகியோர் தலையிட்டதால் விஸ்வரூபம் எடுத்தது.மாணவியின் தாயார் அளித்த புகாரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொது கல்விதுறை இயக்குனர் ஷானவாஸ்க்கு, கல்விதுறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டார். அதேபோல் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உடும்பன் சோலை போலீசார், மாவட்ட குழந்தைகள் நல குழு ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டதாக குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஷாஜூ தெரிவித்தார்.