ஓட்டு திருட்டு என்பது அரசியல் சொல்லாடல்; முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் வெளிப்படை
புதுடில்லி : 'நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கின்றன. ஓட்டு திருட்டு என்ற சொல்லாடல் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது' என, முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டுகளை திருடி பா.ஜ., வெற்றி பெற்றதாகவும், இதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருந்ததாகவும், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார். இதுவரை முறைகேடு என்ற வார்த்தையை பயன்படுத்திய ராகுல், தற்போது ஓட்டு திருட்டு என்ற புது சொல்லாடலை பயன் படுத்தி வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து விட்டது. எனினும், அவர் செல்லுமிடமெல்லாம் இதையே கூறி வருகிறார். ஆங்கில தனியார் செய்தி சேனலான, 'இந்தியா டுடே' சார்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் ஓ.பி.ராவத், அசோக் லவாசா ஆகியோர் பங்கேற்றனர். இதில், முன்னாள் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா பேசுகையில், ''நம் நாட்டில் நடக்கும் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடக்கின்றன. இதற்கு, கடந்த கால நிகழ்வுகளே சாட்சி. ''ஓட்டு திருட்டு என்ற சொல்லாடல், அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது. வாக்காளர் யாருக்கு ஓட்டளித்தார் என்பதை யாரா லும் அறிய முடியாது ,'' என்றார். முன்னாள் தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறுகையில், ''தேர்தலில் வெற்றி பெற, கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யும். அந்த வகையில், ஓட்டு திருட்டு என்ற சொல்லாடல், அரசியல் ஆதாயத்தின் ஒரு பகுதியே. நம் நாட்டில் நடக்கும் தேர்தல்கள் உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கின்றன,'' என்றார். நியாயமான தேர்தல்களை உறுதி செய்ய பிழையில்லாத வாக்காளர் பட்டியல் அவசியம். வாக்காளர் பட்டியல் பற்றிய கவலை நியாயமானவை. அது, நாட்டின் தேர்தல்கள் மற்றும் நேர்மைக்கு அடித்தளமாக அமைகிறது. வாக்காளர் பட்டியல் சரியாக இல்லாவிட்டால், தேர்தல்களை நம்பகமானதாக கருத முடியாது. சில அரசியல் பிரச்னைகள், தேர்தல் கமிஷனின் நற்பெயரை கெடுக்கின்றன. அவற்றை நாம் கவனிக்க வேண்டும். எஸ்.ஒய்.குரேஷி முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்