தேடப்படும் கொள்ளையன் ஜெய்விஹாரில் சுட்டுப் பிடிப்பு
புதுடில்லி,:கொள்ளை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி, துவாரகாவில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.நஜப்கர், தரம்புராவைச் சேர்ந்தவர் அக்ஷய் என்ற கோலு,30. நேற்று முன் தினம் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டார். ஏற்கனவே அவர் மீது கொள்ளை, வழிப்பறி, திருட்டு மற்றும் ஆயுத விற்பனை என 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஜெய் விஹார் நாலா சாலை அருகே, பைக்கில் சென்ற கோலுவை போலீசார் தடுத்தனர். ஆனால், வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றார். துரத்திச் சென்ற போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். போலீஸ் கொடுத்த பதிலடியில், கோலுவின் இடது காலில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார்.போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காயம் அடைந்த கோலு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து குண்டு அகற்றப்பட்டது.இதுவரை 10 முறை தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ள கோலு, கடைசியாக ஜனவரி 18ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமினில் இருந்த நிலையில், நேற்று முன் தினம், கொள்ளையடித்துள்ளார்.