புனே : தனி விமானத்தில் பாங்காக் சென்ற மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரின் மகன், கடத்தப்பட்டதாக தகவல் பரவியதால், மஹாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்பட்டது.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முந்தைய அரசில் சிவசேனா சார்பில் சுகாதார அமைச்சராக இருந்த தனாஜி சவந்த் மகன் ரிஷிராஜ், திடீரென மாயமானார். புனேயில் அவரை இரண்டு பேர் விமானத்தில் கடத்திச் சென்றதாக தகவலறிந்த தனாஜி, போலீசில் புகார் அளித்ததோடு, தன் மகனை மீட்கும்படி, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் ஆகியோரிடம் கோரினார். விசாரித்தபோது, புனேயில் இருந்து, தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகருக்கு சென்று கொண்டிருக்கும் தனி விமானம் ஒன்றில் ரிஷிராஜ் செல்வதும், அந்தமானின் ஸ்ரீவிஜயபுரம் நகருக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. உடனே தனியார் விமான நிறுவனம் வாயிலாக, பைலட்டுகளுக்கு தகவலை கூறி, விமானத்தை புனேவுக்கு திருப்பும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, விமானம் பறக்கும் திசையை காட்டும் 'டிவி'க்களை அணைத்ததோடு, ரிஷிராஜுக்கு தெரியாமலேயே, விமானத்தை திருப்பிய பைலட்டுகள், மீண்டும் புனேயில் விமானத்தை தரை இறக்கினர். உண்மையில் தனிவிமானம் ஒன்றை முன்பதிவு செய்து, தன் நண்பர்கள் இருவருடன் பாங்காக் நோக்கி ரிஷிராஜ் புறப்பட்டிருக்கிறார். பாங்காக் என நினைத்து தரை இறங்கியபோது, புறப்பட்ட இடத்திலேயே திரும்பவும் கொண்டு வந்து விட்டதால் அதிர்ச்சியடைந்து, பைலட்டுகளிடம் கோபத்தில் வாக்குவாதம் செய்துள்ளார்.தரை இறங்கியதும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் ரிஷிராஜை சூழ்ந்து கொண்டதால், அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதன்பின், அவர் கடத்தப்பட்டதாக அவரது தந்தை புகார் அளித்த விபரம் அறிந்ததும், வீட்டுக்கு தெரியாமல் தன் நண்பர்களுடன் தனி விமானத்தை முன்பதிவு செய்து வர்த்தகம் விஷயமாக பாங்காக் சென்றதாக போலீசில் ரிஷிராஜ் தெரிவித்தார். கடத்தல் வழக்கு பதிவு செய்து விட்டதால், சம்பவத்தின் முழு விபரத்தையும் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக போலீசார் கூறினர். ஒரு வாரத்துக்கு முன் இதேபோன்று, வீட்டுக்கு தெரியாமல் துபாய்க்கு ரிஷிராஜ் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விவகாரத்தை மஹாராஷ்டிரா எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.