உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமான விபத்துக்கு பைலட் காரணமா?: அமெரிக்க ஊடக செய்திக்கு கண்டனம்

ஏர் இந்தியா விமான விபத்துக்கு பைலட் காரணமா?: அமெரிக்க ஊடக செய்திக்கு கண்டனம்

புதுடில்லி: 'ஆமதாபாத், 'ஏர் இந்தியா' விமான விபத்துக்கு, இன்ஜினுக்கான எரிபொருளை விமானி ஒருவர் துண்டித்ததை, காக்பிட் உரையாடல் உறுதிபடுத்துகிறது' என, அமெரிக்க ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய விமானிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடந்த மாதம் 12ம் தேதி புறப்பட்ட, 'ஏர் இந்தியா போயிங் 787 -- 8 ட்ரீம்லைனர்' விமானம் விழுந்து நொறுங்கியது. இது தொடர்பாக விசாரித்த ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணைக் குழு கடந்த 12ம் தேதி மத்திய அரசிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. விமானத்தின் எரிபொருள் வினியோகம் துண்டிக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என அதில் கூறப்பட்டது. விமானிகளுக்கான, 'காக்பிட்' அறையில், இரு விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல் விபரங்களையும் அறிக்கையில் வெளியிட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல நாளிதழான, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', இரு விமானிகளுக்கு இடையிலான உரையாடலை மேற்கோள் காட்டி, செய்தி அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்:காக்பிட் அறையில் இரு விமானிகள் பேசுவது குறித்து விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், விமானம் புறப்பட்ட சில வினாடிகளுக்கு பின், விமானத்தின் முதல் அதிகாரி, அனுபவம் வாய்ந்த கேப்டனிடம், 'ஏன் எரிபொருள் சுவிட்சுகளை 'கட்ஆப்' நிலைக்கு மாற்றினீர்கள்' என கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு கேப்டன், 'நான் அவ்வாறு செய்யவில்லை' என, பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல், விபத்துக்கான முக்கிய காரணமாக மனித தவறே இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இருப்பினும், எரிபொருள் சுவிட்ச் கட் ஆப் ஆனது எப்படி என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் சுமீத் சபர்வால், 15,638 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவமும், முதல் அதிகாரி கிளைவ் குந்தர், 3,403 மணிநேர அனுபவமும் கொண்ட நிலையில், இந்த விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமானிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு!

'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' எழுதிய கட்டுரைக்கு எப்.ஐ.பி., எனப்படும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் தலைவர் ரந்தவா நேற்று கூறுகையில், “விமானியின் தவறு காரணமாக எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் அணைக்கப்பட்டதாக அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. வால் ஸ்ட்ரீட் அறிக்கையில், விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என கூறப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.“அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். முதற்கட்ட அறிக்கையை வைத்து யாரும் எந்த முடிவுக்கு வர வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளோம். விரிவான அறிக்கைக்கு பின், விபத்துக்கான முழு காரணம் தெரியவரும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூலை 18, 2025 07:05

என்னிக்கி நாங்களே விசாரிச்சுப்போம்னு சொன்னாங்களோ அன்னிக்கே உண்மை வெளிவராதுன்னு தெரிஞ்சிரிச்சு. கம்பெனிகளில் இண்டர்னல் ஆடிட் நு வெச்சு எல்லாம் பக்காவா இருக்குன்னு ரிப்போர்ட் குடுப்பாங்க.


Kasimani Baskaran
ஜூலை 18, 2025 04:07

இந்த மாடல் விமானத்தில் காக்பிட் வீடியோ ரெக்கார்டர் பொருத்தப்பட்டு இருக்கும். கண்டிப்பாக அதன் பதிவுகளை பார்த்தல் தெளிவாக தெரியும். ஒருவேளை அது சேதமாகிவிட்டது என்று பொய் சொல்லவும் வாய்ப்பு உண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை