இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மூணாறு:மூணாறு அருகே ராஜமலையில் இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் மூன்று மாதங்களாக நீர்வரத்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. அவற்றை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ராஜமலையில் இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. தேசிய பூங்காவில் உள்ள தென்னிந்தியாவின் உயரம் கூடிய ஆனமுடி(8842 அடி) சிகரத்தின் அருகில் உள்ள சின்ன ஆனமுடி மலையில் உருவாகி 500 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும். தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆரப் பரித்து கொட்டும். இந்தாண்டு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 24ல் துவங்கியதால் ஜூன் முதல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து உள்ளது. அவ்வப்போது மேக கூட்டங்கள் சூழ ரம்மியமாக காணப்படும் நீர்வீழ்ச்சியை கடந்த மூன்று மாதங்களாக சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.