உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தின் நெருக்கடிக்கு நாங்கள் பணியவில்லை! துணை முதல்வர் சிவகுமார் விளக்கம்

தமிழகத்தின் நெருக்கடிக்கு நாங்கள் பணியவில்லை! துணை முதல்வர் சிவகுமார் விளக்கம்

மாண்டியா: “நாங்கள் தமிழகத்துக்கு பணியவில்லை. நமது விவசாயிகளின் பயிர்களுக்கு, குடிநீருக்கும் தண்ணீரை திறந்து விட்ட பின்னரே, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டோம்,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:தற்போது கூட்டணி வைத்துள்ள பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைவர்கள், ஒரு நாளாவது மக்களுக்கு ஆதரவாக, மத்திய அரசிடம் குரல் கொடுத்தனரா? தேவகவுடா இப்போது கண்ணீர் சிந்துகிறார். இவரது கண்ணீர் தன் குடும்ப நலனுக்கு தானே தவிர, ஏழை மக்களுக்காக அல்ல.மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உளியிடம் அடிபடாத எந்த கல்லும் சிலை ஆகாது. கலப்பை மண்ணில் படாமல், எந்த நிலத்திலும் பயிரிட முடியாது. நாங்களும், நீங்களும் உழைத்தால் மட்டுமே, முன்னேற முடியும். விலை உயர்வால் தத்தளிக்கும் மக்களின் நலனுக்காக, வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தினோம். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், மாணவர்களின் கல்வி கட்டணம் என, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.எங்களின் திட்டங்களால், ஏழை குடும்பத்தினருக்கு, ஆண்டுதோறும் 50,000 முதல் 60,000 ரூபாய் வரை மிச்சமாகிறது. வாக்குறுதித் திட்டங்களுக்காக, முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டில், 52,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.மக்களுக்கு நன்றிக்கடன் செய்த திருப்தி, எங்களுக்கு உள்ளது. மாண்டியாவில் தொழிற்சாலை அமைத்து, ஆறுகள், கால்வாய்களை சீரமைத்து, புது வடிவம் கொடுப்போம். மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருவோம்.எங்கள் அரசில், அம்பரிஷ் அமைச்சராக இருந்தார். அவரது பெயரில் சாலை அமைக்க, எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. அம்பரிஷின் நண்பரான ஸ்டார் சந்துருவை, மாண்டியாவில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் வெற்றி பெறுவது உறுதி.நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், ஏரிகளை நிரப்ப, கால்வாய் சீரமைக்க 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கினோம். கே.ஆர்.எஸ்., அணை பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த, டெண்டர் அழைத்துள்ளோம். நாங்கள் மக்களின் நலனுக்காக, மேகதாது திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்.மேகதாது திட்டம் பெங்களூருக்கு மட்டும் பயன்படும் திட்டம் அல்ல. அங்கு அணை கட்டி 64 டி.எம்.சி., தண்ணீரை சேகரித்தால், நெருக்கடியான நேரத்தில் இங்கிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடலாம்.கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி நீரை பெங்களூரு, மாண்டியா, மைசூரு என, மற்ற பகுதிகளுக்கு பயன்படுத்தலாம். நாங்கள் தமிழகத்துக்கு பணியவில்லை. நமது விவசாயிகளின் பயிர்களுக்கு, குடிநீருக்கும் தண்ணீரை திறந்துவிட்ட பின்னரே, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட்டோம். மாண்டியா விவசாயிகளின் பயிர்களை காப்பாற்றினோமா, இல்லையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ