நீதியால் அநீதியை பழிதீர்த்து விட்டோம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
புதுடில்லி: 'பாரதம் நீதியை மட்டும் நிலைநாட்டவில்லை; நிகழ்ந்த அநீதிக்கும் பழி தீர்த்துக் கொண்டது' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று கடிதம் எழுதி உள்ளார். சிறப்பு வாய்ந்தது அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பின் கொண்டாடப்படும் இரண்டாவது தீபாவளி இது. நீதியை நிலைநாட்டவும், அநீதிக்கு எதிராக போராடவும் ஸ்ரீராமர் நமக்கு கற்று கொடுத்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையே அதற்கு சிறந்த உதாரணம். ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது பாரதம் நீதியை மட்டும் நிலை நாட்டவில்லை; நிகழ்ந்த அநீதிக்கும் பழிவாங்கியது. குறிப்பாக, இந்த தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் தொலைதுாரங்களில் உள்ள பல மாவட்டங்களில் விளக்கு ஏற்றப்பட்டது. நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதம், அம்மாவட்டங்களில் இருந்து வேரோடு அழிக்கப் பட்டுவிட்டது. சாதனை வன்முறை பாதையை கைவிட்டு, வளர்ச்சிக்கான நீரோட்டத்தில் நக்சல்கள் இணைந்து வருகின்றனர். நம் அரசியலமைப்பு மீதான நம்பிக்கையே இதற்கு காரணம். இது தான் நம் தேசத்தின் மிக முக்கியமான சாதனை. இதற்கு நடுவே சில வரலாற்றுபூர்வமான சாதனைகளும் நிகழ்ந்து இருக்கின் றன. நவராத்திரியின் முதல் நாளில் ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைக்கப்பட்டு அமலாகின. இதன் மூலம் பல கோடி ரூபாய்களை நம் நாட்டு மக்கள் சே மிக்க துவங்கிவிட்டனர். ஒரு விளக்கின் மூலம் மற்றொரு விளக்கில் ஒளி ஏற்ற முடியும். அதனால் அந்த விளக்கின் ஒளி குன்றாது; மாறாக பன்மடங்கு வளரும் என்பதை தீபாவளி நமக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறது. அதே உணர்வுடன், இந்த தீபாவளி நாளில் நல்லிணக்கம், கூட்டுறவு, நேர்மறை எண்ணங்கள் என்ற தீபங்களை ஏற்றி நம் சமூகத்தை பிரகாசமடைய செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.