உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விரும்புகிறோம்; கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா பேட்டி

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விரும்புகிறோம்; கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: '' இந்தியா உடன் உறவை மேம்படுத்தவே நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதே, கனடா கொண்டு வந்த செய்தி,'' என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியுள்ளார். கனடாவில் முன்பு ஆட்சியில் இருந்த ஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான அரசு, இந்தியாவுடன் மோதல் போக்கை மேற்கொண்டது. அங்கு பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக, ட்ரூடோ, பார்லியில் பகிரங்கமாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து, இரு நாட்டு உறவில் விரிசல் விழுந்தது.இரு நாடுகளும் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக, உறவுகள் அதல பாதாளத்தை எட்டின. இந்நிலையில், கனடாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மார்க் கார்னி புதிய பிரதமர் ஆக பதவியேற்றதும் நிலைமை மாறியுள்ளது. புதிய அரசு, இந்தியாவுடன் நல்லுறவை மீட்டெடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியா வந்துள்ளார். நேற்று டில்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டில்லியில் உள்ள கனடா தூதரகத்துக்கு சென்ற அவர், அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் பேசினார்.இந்நிலையில் அனிதா ஆனந்த் மஹாராஷ்டிரா சென்றார். அங்கு மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார். இன்னும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் இருப்பதும், மும்பை வந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா உடன் உறவை மேம்படுத்த நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதே, இந்தியாவுக்கு கனடா கொண்டு வந்த செய்தி. உள்நாட்டு பொது பாதுகாப்பில் கவனம் செலுத்தும் நிலையில், பல துறைகளில் இந்தியா உடன் பொருளாதார உறவை பலப்படுத்த விரும்புகிறோம். அதில், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, விவசாயம் மற்றும் உணவு பொருள், பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல், மக்களுக்கு இடையே, வர்த்தகத்துக்கு இடையேயான உறவை வலுப்படுத்த விரும்புகிறோம். இது நேற்று நாங்கள் வெளியிட்ட ஆக்கப்பூர்வமான அறிக்கையாகும். கனடா இந்தியா இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இந்தியா உடன் பணியாற்ற தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில், உள்நாட்டில் அமைதி மற்றும் பொருளாதார உறவு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இவ்வாறு அனிதா ஆனந்த் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !