மேற்கு வங்க பா.ஜ., தலைவரின் கார் உடைப்பு
கொல்கட்டா : மேற்கு வங்க பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி, கூச் பெஹார் மாவட்ட எஸ்.பி.,யை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க நேற்று சென்றார். அவருக்கு எதிராக ஆளும் திரிணமுல் காங்., தொண்டர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். மதியம் 12:35 மணி அளவில், கக்ரபாரி என்ற பகுதி அருகே சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு வாகனங்கள் வந்த போது, மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில், போலீஸ் வாகனம் உட்பட இரு வாகனங்களின் கண்ணாடிகள் சுக்குநுாறாக உடைந்தன. மேலும், போராட்டம் நடந்த கூட்டத்தில் இருந்து பா.ஜ., நிர்வாகிகளை நோக்கி, காலணிகள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. 'சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு வாகனங்களை திரிணமுல் காங்., நிர்வாகிகள் தான் தாக்கினர்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியது. ஆனால், இதை அக்கட்சி மறுத்துள்ளது.