UPDATED : செப் 27, 2024 10:20 PM | ADDED : செப் 27, 2024 08:16 PM
மும்பை: 'ஒரே ஊரில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்' என பிறப்பித்த உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என்று மஹாராஷ்டிரா அரசுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 31ம் தேதி, சொந்த ஊரில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை மாநில நிர்வாகம் முழுமையாக நிறைவேற்றவில்லை.இந்நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை இன்று( செப்.,27) ராஜிவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், இது குறித்து ராஜிவ் குமார் பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மும்பையில் மட்டும் 100 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முக்கிய பதவிகளில் பணியில் உள்ளனர். அதிகாரிகள் இடமாற்றம் செய்ய வேண்டும் என தெளிவாக உத்தரவிட்டும், அதனை நிறைவேற்றாதது குறித்து தலைமைச்செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும், வருவாய்த்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்யாததற்கும், மாநில அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காததற்கும் ராஜிவ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களது அதிருப்தியை பதிவு செய்தனர். இதற்கு என்ன காரணம் என்பதை தெளிவாக விளக்க வேண்டும் என தலைமைச்செயலாளர் மற்றும் டி.ஜி.பி., ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.மாநிலத்தில் மதுபானங்கள் விநியோகத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர்களை முறையாக சோதனை செய்ய வேண்டும். யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ளக்கூடாது. சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லுதல், போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்சுகளில் பணம் கொண்டு செல்வதையும் கண்காணிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.