உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமணம் எப்போது? காங்கிரஸ் ராகுல் பதில்!

திருமணம் எப்போது? காங்கிரஸ் ராகுல் பதில்!

அராரியா, ஆக. 25-திருமணம் குறித்து பேச்சு நடந்து வருவதாக, காங்கிரசைச் சேர்ந்த லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குறிப்பிட்டார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, தற்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. பீஹாரில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர், 'வாக்காளர் உரிமை யாத்திரை' என்ற பெயரில் பீஹார் முழுதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அராரியா மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ''லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், பிரதமர் மோடிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கிறார். ''அவருடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவரை மூத்த சகோதரனாக கருதுகிறேன். அந்த அடிப்படையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள அவருக்கு அறிவுறுத்துகிறேன்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட ராகுல், ''இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவின் தந்தை லாலு பிரசாத் உடன் பேச்சு நடக்கிறது,'' என்றார். 'ராகுல் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அது அவரது தாய் சோனியாவின் ஆசை. அவரை மணமகனாக பார்க்க வேண்டும் என்பது எங்களது ஆசை' என, லாலு பிரசாத் யாதவ் இரு ஆண்டுகளுக்கு முன் கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ