ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித், கோலி ஓய்வு எப்போது?
மும்பை: ஆஸ்திரேலிய தொடருக்கு பின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரோகித், கோலி ஓய்வு பெறலாம். இந்திய அணியின் 'சீனியர்' வீரர்கள் ரோகித் சர்மா 38, கோலி 36. இருவரும் 'டி-20', டெஸ்டில் இருந்து விடைபெற்றனர். ஒருநாள் போட்டியில் மட்டும் நீடிக்கின்றனர். 2027ல் தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் (அக்.19-25) விடைபெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுப்மன் தலைமை
'டி-20', டெஸ்டில் இவர்கள் இல்லாமல் இந்திய அணி சாதித்து வருகிறது. இதே போல ஒருநாள் போட்டிகளிலும் அசத்தலாம். ரோகித்திற்கு பதிலாக ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் நியமிக்கப்படலாம். திறமையான இளம் வீரர்களுக்கு 2027ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் முக்கியத்துவம் அளிக்கப்படும். அவசரம் இல்லை
இது குறித்து பி.சி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''ஒருநாள் போட்டிகளில் கோலி, ரோகித் அனுபவம் வாய்ந்தவர்கள். இருவரும் சேர்ந்து 83 சதம், 25,000 ரன்னுக்கும் மேல் எடுத்துள்ளனர். இவர்கள் விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம். ஓய்வு எண்ணம் இருந்தால், எங்களிடம் தெரிவித்து இருப்பர். உலக கோப்பை தொடரில் இவர்கள் இடம் பெறுவரா என கூற முடியாது. செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பை 'டி-20' தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறோம்,''என்றார்.
'நம்பர்' தேர்வு எப்படி
ரோகித் சர்மா புதிதாக ஆரஞ்ச் நிற 'லம்போர்கினி உருஸ்' ஸ்போர்ட்ஸ் எஸ்.யு.வி., (எஸ்.இ.,) சொகுசு கார் வாங்கியுள்ளார். விலை ரூ. 4.57 கோடி (எக்ஸ்-ஷோரூம்). மணிக்கு 312 கி.மீ., வேகத்தில் பறக்கும். 0-100 கி.மீ., வேகத்தை 3.4 வினாடியில் எட்டும். இதன் நம்பர் 3015. ரோகித் மகள் சமைரா, டிச.30, மகன் அஹான், நவ.15ல் பிறந்தனர். இதை குறிக்கும் விதமாக நம்பரை தேர்வு செய்துள்ளார். தவிர 30+15ஐ கூட்டினால் ரோகித்தின் ஜெர்சி நம்பர் 45 வரும். ஏற்கனவே நீல நிற லம்போர்கினி கார் வைத்திருந்தார். இதன் நம்பர் 264. இது ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா அடித்த 264 ரன்னை (எதிர், இலங்கை, கோல்கட்டா ஈடன் கார்டன், 2014) குறிக்கும். இந்த காரை, பிரிமியர் தொடர் போட்டி ஒன்றில் வென்ற ரசிகருக்கு பரிசாக அளித்தார்.
கங்குலி விருப்பம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,''ஒருநாள் போட்டிகளில் கோலி, ரோகித் சர்மா மகத்தான சாதனை படைத்துள்ளனர். சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்திய அணியில் தொடர வேண்டும். ஆஸ்திரேலிய தொடர் தான் இவர்கள் பங்கேற்கும் கடைசி ஒருநாள் போட்டியா என்பது பற்றி எனக்கு தெரியாது,''என்றார்.