உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களூரு வங்கி கொள்ளையர்கள் எங்கே?

மங்களூரு வங்கி கொள்ளையர்கள் எங்கே?

மங்களூரு: மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் 12 கோடி ரூபாய் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், கேரளா வழியாக தமிழகத்திற்கு தப்பிச் சென்றனரா என்ற சந்தேகம், போலீசாருக்கு எழுந்துள்ளது.தட்சிண கன்னடா உல்லால் கோட்டேகார் பகுதியில் கூட்டுறவு வங்கியில் நேற்று முன்தினம் நான்கு பேர் கும்பல், நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பினர்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 10 கோடி முதல் 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வங்கியின் தலைவர் கிருஷ்ணா ஷெட்டி, 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், 11 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரிவித்தார்.அதே வேளையில், போலீசில், அவர் அளித்த புகாரில், நான்கு கோடி ரூபாய் நகை, பணம் கொள்ளை போனதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு என்ன என்பது தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். கொள்ளை பற்றி அறிந்ததும், வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கிச் சென்ற பெண்கள், நேற்று காலை வங்கி முன் கூடினர். 'எங்களது நகைகளை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள்' என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை வங்கி ஊழியர்கள் சமாதானம் செய்தனர்.இதற்கிடையில் நகை, பணத்தை கொள்ளை அடித்துவிட்டு காரில் தப்பிய கும்பல், கேரளாவின் காசர்கோடு சென்றது தெரிந்தது.இதனால் காசர்கோடுக்கு, உல்லால் போலீசார் விரைந்தனர். ஆனால் கொள்ளை கும்பலை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. காசர்கோடில் இருந்து தமிழகத்திற்கு தப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காசர்கோடு மீனவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஹைதராபாதில் தீவிரம்

பீதரில் ஏ.டி.எம்., அருகே தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியரை சுட்டுக் கொன்று 93 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற இருவரை, தனிப்படை போலீசார் ஹைதராபாதிலும் தேடி வருகின்றனர்.தனிப்படை போலீசாருடன் மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஹரிசேகரன் தலைமையிலான போலீசார் தொடர்பில் இருந்து வருகின்றனர்.இந்த விசாரணையில், கிளீனர் மீது துப்பாக்கியால் சுட்ட பின், இரண்டு கொள்ளையர்களும் செகந்திராபாத் ரயில் நிலையம் சென்றதும், அங்குள்ள ஒரு கடையிலிருந்து புது துணிகள் வாங்கி தங்கள் உடை மாற்றியதும்; அங்கிருந்து திருமலைகிரிக்கு தப்பிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இதனால் கொள்ளையர்களை ஹைதராபாதில் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை