பி.ஆர்.எஸ்., பிளவுபட்டால் யாருக்கு லாபம்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக வேண்டும் என, குரல் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டவர்களில், பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மிகவும் முக்கியமானவர். தனி மாநிலமாக தெலுங்கானா உருவானதும் நடந்த முதல் தேர்தலில் வென்று முதல்வரானார். தெலுங்கானாவில் தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவ், அதீத தன்னம்பிக்கையில், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியின் பெயரை, பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றினார். தேசிய அரசியலில் கவனம் செலுத்தவும், பிரதமர் நாற்காலியை குறிவைத்தும், அவர் காய் நகர்த்தினார். இதற்காக பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களை சந்தித்த அவர், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் அவரது திட்டம் தவிடுபொடியானது. கட்சியின் பெயரை மாற்றுவதில் செலுத்திய கவனத்தை கூட, கட்சியின் கட்டமைப்பை வளர்ப்பதில் அவர் செலுத்தவில்லை என்பதே நிதர்சனம். குடும்ப சண்டை
கடந்த 2023ல் நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், 39ஐ மட்டுமே பாரத் ராஷ்டிர சமிதி கைப்பற்றியது. 88 ஆக இருந்த அக்கட்சியின் பலம், 39 ஆக குறைந்தது; ஓட்டு வங்கியும் சரிந்தது. ஆட்சி அதிகாரத்தை காங்., கைப்பற்றியதை அடுத்து, முதல்வராக அக்கட்சியின் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், பாரத் ராஷ்டிர சமிதியின் செல்வாக்கு மேலும் சரிந்தது. 17 தொகுதிகளில் ஒன்றை கூட அக்கட்சி வெல்லவில்லை. இப்படி அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வரும் பாரத் ராஷ்டிர சமிதியில், தற்போது குடும்ப சண்டை தலைதுாக்கி உள்ளது. அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு எதிராக, சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.,யுமான கவிதா போர்க்கொடி துாக்கி உள்ளார். மேலும், பா.ஜ.,விடம் கட்சியை அடமானம் வைத்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளியில் உள்ள கவிதா, பா.ஜ., மீது கடுங்கோபத்தில் உள்ளார். அக்கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என வலியுறுத்தி, தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவுக்கு கவிதா கைப்பட கடிதமும் எழுதினார். இதன் வாயிலாக, பாரத் ராஷ்டிர சமிதியில் கோஷ்டி பூசல் நிலவுவது அம்பலமானது. பா.ஜ.,வுக்கு சாதகம்
இதற்கிடையே, முதல்வர் ரேவந்த் ரெட்டியை கவிதா அணுகியதாகவும், தனக்கு ஆறு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாகவும், அமைச்சர் பதவி வழங்கும்படி அவரிடம் கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை முதல்வர் ரேவந்த் ரெட்டி நிராகரித்ததாகவும், அப்படி செய்தால், அது பா.ஜ.,வுக்கு சாதகமாகி விடும் என்றும் அவர் கருதியதாகவும் கூறப்படுகிறது. கட்சிக்கு எதிராக கவிதா போர்க்கொடி துாக்கி உள்ளதால், அதிருப்தியில் உள்ள சந்திரசேகர ராவ், கட்சி பிளவுபட்டு விடுமோ என்ற பயத்தில் உள்ளார். கட்சியின் செயல் தலைவர் பதவியில் உள்ள மகன் ராமா ராவிடம், கட்சியின் முழு பொறுப்பை சந்திரசேகர ராவ் ஒப்படைக்கஇருந்த நிலையில், கவிதாவின் திடீர் போர்க்கொடி அவருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அப்படி பாரத் ராஷ்டிர சமிதி இரண்டாக உடைந்தால், அது பா.ஜ., வளரவே சாதகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது - நமது சிறப்பு நிருபர் - .