| ADDED : செப் 20, 2024 12:35 PM
புதுடில்லி: ''இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல. வளர்ச்சிக்கான கூட்டாளிகள் ,'' என இந்தியாவுக்கான சீன தூதர் கூறியுள்ளார்.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலுக்குப் பின், இரு நாட்டு உறவில் விரிசல் அதிகரித்தது. இச்சூழலில் கடந்த ஏப்ரலில் வடகிழக்கு பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியதால், இந்த விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. சீனாவின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு கண்டித்து வருகிறது.இந்நிலையில் டில்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் ஷியு பெய்ஹோங் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவும், சீனாவும் இரண்்டு பெரிய மற்றும் வளரும் நாடுகள். பொருளாதாரத்தை வளர்ப்பது மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது என்ற இரண்டு முக்கிய கடமைகள் உள்ளன. இந்த நூற்றாண்டில் சிறந்த நவீன நாடாக மாறுவது என சீனா உறுதிபூண்டுள்ளது. 2047 க்குள் வளர்ந்த நாடாவது என இந்தியா தீர்மானத்தில் உள்ளது. நீண்ட காலமாக இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பில் உள்ளன. 1950 ல் சீனாவும், இந்தியாவும் வகுத்த ஐந்து அம்ச கொள்கைகள், தற்போது உலகளவில் அடிப்படை விதியாக மாறி உள்ளன. சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கையாகவும் மாறி உள்ளன.இந்த நவீன யுகத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியும் பல்வேறு முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்டி உள்ளனர். இது சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்கள் அல்ல என்பதையும், ஒத்துழைப்பாளர்கள் என்பதை காட்டுகிறது. நாம் வளரும் கூட்டாளிகள். அச்சுறுத்துபவர்கள் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.