உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானியை கைது செய்யாதது ஏன்? காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி

அதானியை கைது செய்யாதது ஏன்? காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி

புதுடில்லி, ''சிறிய வழக்குகளில் நுாற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் அதானியை, ஏன் இதுவரை சிறையில் அடைக்கவில்லை?'' என, காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் அளித்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள், அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த விவகாரத்தில், கவுதம் அதானியை உடனே கைது செய்ய வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ள நிலையில், இந்த பிரச்னையை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அங்கும் எழுப்பினர்.இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் நேற்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதாவது:தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொள்வார் என நினைக்கிறீர்களா? நீங்கள் எந்த உலகில் வாழ்கிறீர்கள்? நிச்சயமாக, அவர் அதை மறுப்பார்.எனினும், அதானியை கைது செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.சிறிய குற்றங்களை செய்யும் நுாற்றுக்கணக்கானோர் சிறையில் உள்ளனர். ஆனால், அதானி மீது பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. தொழிலதிபர் அதானியை, மத்திய அரசு பாதுகாத்து வருகிறது. எனவே, அவரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
நவ 28, 2024 09:46

பல ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு நேர்மையான காங்கிரஸ் எம்பி இருக்கிறார் இவர் போக்கில் விட்டால் கண்டிப்பாக தண்டனை பெற்று வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் லல்லு பிரசாத் ஆகவே இவர் ஜெயிலுக்குள் தள்ளி விடுவார்