உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாய வேலைகளில் விதவையருக்கு முன்னுரிமை

விவசாய வேலைகளில் விதவையருக்கு முன்னுரிமை

மும்பை : மஹாராஷ்டிராவில், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில், விவசாய தினக்கூலி வேலைகளில் விதவையருக்கு முன்னுரிமை அளிக்கும் தீர்மானத்தை நாரலே கிராம பஞ்சாயத்து நிறைவேற்றி உள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தினக்கூலி இங்கு சோலாப்பூர் மாவட்டத்தின் சங்கோலா தாலுகாவில் உள்ள நாரலே கிராமத்தில், ஒரு மாதத்துக்கு விவசாய தினக்கூலி வேலைகளில் விதவையரை ஈடுபடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்படி, வேலைக்கு செல்லும் விதவையருக்கு, 300 ரூபாய் தினக்கூலி வழங்கப்படும். இதில், 150 ரூபாயை கிராம பஞ்சாயத்து வழங்கும். மீதமுள்ள 150 ரூபாயை வேலைக்கு அமர்த்தும் விவசாயி வழங்குவார். சமூக ஆர்வலர் பிரமோத் ஜிஞ்சாடேவின் முயற்சியால் உருவான இத்திட்டம், வரும் 15ல் சுதந்திர தினத்தன்று துவங்கப்பட உள்ளது. மன அழுத்தம் இது குறித்து, கிராம மேம்பாட்டு அலுவலர் விபீஷன் சாவந்த் கூறியதாவது: நாரலே கிராம பஞ்சாயத்தில், 2,000 பேர் வசிக்கின்றனர். இதில், 30க்கும் மேற்பட்ட விதவையர் இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கவும் வேலை மிகவும் அவசியம். கூலியில், 50 சதவீதத்தை மட்டுமே தருவதால், விவசாயிகளும் இத்திட்டத்தால் பயனடைவர். கிராமப்புறங்களில் உள்ள விதவையர், சமூகப் புறக்கணிப்பு, நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். கணவரின் மரணத்திற்குப் பின், சமூக அந்தஸ்தையும், நம்பிக்கையையும் பெண்கள் இழக்கின்றனர். சமூக மற்றும் மத நிகழ்வுகளில் அவர்களுக்கு மரியாதை வழங்கப்படுவதில்லை. நாரலே கிராம பஞ்சாயத்தின் முன்முயற்சி விதவையருக்கு அதிகாரம் அளித்து நம்பிக்கை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை