மனைவி கொலை: கணவன் கைது
பாலக்காடு; பாலக்காடு அருகே, மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பொன்னானி பெரும்படப்பு பகுதியை சேர்ந்தவர் சத்யன், 54; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுனிதா, 50. தம்பதியருக்கு சூரியா, சங்கீதா, சஞ்சய் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர்களில் பொன்னானியில் உள்ள அரசு பள்ளியில் சூரியா ஆசிரியராகவும்; களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹார்ட் டெக்னீஷியனாக சங்கீதாவும் உள்ளனர். இவர்கள் இருவரும், விடுதியில் தங்கி பணிபுரியாற்றுகின்றனர். இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக, கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக, சுனிதா, மகன் சஞ்சய் உடன், பாலக்காடு மாவட்டம் செர்ப்புளச்சேரி மாங்கோடு அருகே வாங்கிய நிலத்தில், சிறு ஷெட் அமைத்து குடியிருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 5:45 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே வந்த சுனிதாவை, அங்கு பதுங்கியிருந்த சத்யன் கத்தியால் சரமாரியாக குத்தினார்.தாயின் அலறல் சப்தம் கேட்டு வீட்டினுள் இருந்த சஞ்சய் ஓடி வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயையும், அங்கிருந்து தப்பியோடிய தந்தையையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அதன்பின், அருகில் இருந்தவர்கள் உதவியுடன், கத்திக்குத்தில் படுகாயமடைந்த தாயை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், சிகிச்சை பலனன்றி சுனிதா இறந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செர்ப்புளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார், நடத்திய தேடுதலில் அப்பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த சத்யனை கைது செய்தனர்.