கர்நாடக பா.ஜ., தலைவராகிறாரா முன்னாள் முதல்வர் எடியூரப்பா?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கர்நாடக பா.ஜ., தலைவரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா, 49, மீது கட்சி மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தி நிலவும் நிலையில், கட்சியின் தலைவராக எடியூரப்பா, 82, நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது. எதிர்ப்பு
இதன்பின், கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில், 2023 நவம்பரில், மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, 49, மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். துவக்கத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும், சமீபகாலமாக அவர் மந்தமாக செயல்படுவதாக அவரது கட்சியினரே வேதனை தெரிவிக்கின்றனர். கட்சி மற்றும் அரசியல் விவகாரங்களில், விஜயேந்திராவின் முடிவுகள் மீது மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.அவரது தந்தை எடியூரப்பா, கடந்த 2019ல் முதல்வராக பதவியேற்ற போது எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அதே போல், விஜயேந்திராவுக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. லிங்காயத் சமூகத்தின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கும் எடியூரப்பாவுக்கே இந்த நிலைமை என்றால், விஜயேந்திரா மட்டும் எம்மாத்திரம்?கர்நாடக பா.ஜ.,வின் அதிகார மையமாக விளங்கும் விஜயேந்திரா, மாநில அரசியல் சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை என்றும் அவரது கட்சியினர் புலம்புகின்றனர். காங்., அரசில், முதல்வர் சித்தராமையா அணி, துணை முதல்வர் சிவகுமார் அணி என இரு பிரிவுகள் உள்ளன. இரு தரப்பிலும் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் பதவி மீது குறியாக உள்ளனர். காங்கிரசில் அதிகாரப்போர் நிலவுவது வெட்ட வெளிச்சமாக தெரிந்தாலும், இதை மையப்படுத்தி விஜயேந்திரா அரசியல் செய்யவில்லை என, பா.ஜ.,வினர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். சொல்லப்போனால், அவர் தலைவராக நீடிப்பது பலருக்கு பிடிக்கவில்லை.மேலும், தலைநகர் பெங்களூரில் மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளன. இத்தனைக்கும் பெங்களூரில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் மற்றும் நான்கு எம்.பி.,க்கள் இருந்தும், ஆளும் காங்கிரசை அக்கட்சியால் கேள்வி கேட்க முடியவில்லை. விஜயேந்திராவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவன கவுடா பாட்டீல் எத்னால், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதேபோல், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் நீக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை, பஞ்சமசாலி லிங்காயத்துகள் அதிகளவில் உள்ள வட கர்நாடகாவின் சில மாவட்டங்களில் பா.ஜ.,வின் வளர்ச்சியை நேரடியாக பாதித்துள்ளது. சுற்றுப்பயணம்
கர்நாடக பா.ஜ.,வில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில், மத்திய அமைச்சர் சோமண்ணா, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் உள்ளனர்.இருவருமே லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனினும், தலைவர் பதவி கையை விட்டுப்போகாது என்ற நம்பிக்கையில் விஜயேந்திரா இருக்கிறார். கர்நாடக பா.ஜ.,வில் விஜயேந்திராவுக்கு எதிராக இப்படி பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக, அவரது தந்தை எடியூரப்பா அறிவித்தார்.கர்நாடகாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து சென்றபின், இந்த அறிவிப்பு வெளியானது மிகவும் கவனிக்கத்தக்கது.இதன் வாயிலாக, கர்நாடகாவில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. அப்படி என்றால், எடியூரப்பா மீண்டும் தலைவர் ஆகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதுவும் நடக்கலாம் என்றே பா.ஜ., வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.கர்நாடகாவில், 2028ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பா.ஜ., வெற்றி பெற்றால் விஜயேந்திரா முதல்வர் ஆவதற்கு, தற்போது எழுந்துள்ள எதிர்ப்பை விட பல முனைகளில் இருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பும் என கூறப்படுகிறது. அனைவரும் ஏற்கக்கூடிய எடியூரப்பாவை மையப்படுத்தி தேர்தலை சந்திக்கவும், வெற்றி பெற்றபின், முதல்வர் குறித்து விவாதிக்கவும் பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது - நமது சிறப்பு நிருபர் - .