உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்க மங்கை வர்ஷாவுக்கு கர்நாடக அரசு உதவுமா?

தங்க மங்கை வர்ஷாவுக்கு கர்நாடக அரசு உதவுமா?

பொதுவாக நல்ல உடல்வாகுடன் இருப்பவர்களை விட, மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த எண்ணத்தை அடைய விடாமுயற்சியுடன், கடினமாக உழைப்பர். இவர்களில் ஒருவர் தான், இந்திய பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் வர்ஷா. அவரை பற்றி பார்க்கலாம்.கோட்டை நாடு மாவட்டம் என்று அழைக்கப்படும் சித்ரதுர்காவின் ஹிரியூர் அருகே உள்ள ஹடிகோலா கிராமத்தில் பிறந்தவர் வர்ஷா, 31. பிறவியிலேயே அவருக்கு கண் விழித்திரையில் பிரச்னை ஏற்பட்டது. அதை சரி செய்ய பெற்றோர், பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றனர். ஆனால், முடியவில்லை.சிறுமியாக இருந்தபோது வர்ஷாவுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்தது. தோழியருடன் சேர்ந்து எந்த நேரமும் விளையாடி கொண்டு இருப்பார்.

கல்லுாரி படிப்பு

பள்ளி, பி.யு.சி., படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்காக பெங்களூரு சென்றார். அப்போது, அவரது கண் பார்வை முற்றிலும் பறிபோனது. ஆனாலும் விடாமுயற்சியுடன் கல்லுாரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.இந்நிலையில் தோழி ஒருவரின் மூலம், பார்வையற்றோர் கிரிக்கெட் பற்றி வர்ஷாவுக்கு தெரிந்தது. 'சமர்த்தனம் டிரஸ்ட்' மூலம், வர்ஷாவுக்கு கிரிக்கெட் பயிற்சி கிடைத்தது.முதன் முறையாக, 2019ல் கிரிக்கெட் பயிற்சியை துவங்கினார். மூன்று ஆண்டுகள் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டார். மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் ஜொலித்ததால், இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தது. அங்கும் சிறப்பாக விளையாடியதால், கடந்த ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இங்கிலாந்தின் பர்மிங்காமில் பார்வையற்றோருக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, வர்ஷா தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது.நாடு திரும்பியதும் கர்நாடக அரசு சார்பில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற அணியில் வர்ஷா உட்பட மூன்று கர்நாடக வீராங்கனையர் இருந்தனர். அவர்கள் மூன்று பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை கிடைத்தது.

அரசு வேலை

இதுகுறித்து வர்ஷா கூறுகையில், ''எனது தந்தை உமாபதி விவசாயி. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பார்வையற்றோர் கிரிக்கெட்டை பி.சி.சி.ஐ., அங்கீகரித்து ஊக்குவிக்கும் பட்சத்தில், வீராங்கனையருக்கு அது பெரிதும் உதவும்.''பட்டப் படிப்பை முடித்து, அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் ஆள் சேர்ப்பு தேர்வுகள் நடைபெறும்போது, என்னால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ''விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுவது போல, பார்வையற்றோர் கிரிக்கெட்டில் ஜொலிப்போருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்,'' என்றார். -- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை