உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவாகரத்தான கணவர் மீது வழக்கு தொடுத்த பெண்ணுக்கு அபராதம்

விவாகரத்தான கணவர் மீது வழக்கு தொடுத்த பெண்ணுக்கு அபராதம்

புதுடில்லி:விவாகரத்தான கணவர் மீது பெண் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்தது.புதுடில்லியைச் சேர்ந்த விவாகரத்தான பெண், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:என் முன்னாள் கணவர் குழந்தைகளை சந்திக்க வரும்போது தன் பெற்றோரை அழைத்து வரக்கூடாது; குழந்தைகளுடன் சேர்ந்து போட்டோ மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது என, நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆனால், 2023ம் ஆண்டு அக்டோபரில் குழந்தைகளை சந்திக்க வந்த அவர், நீதிமன்ற உத்தரவை மீறி வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். அதே ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் குழந்தைகளைப் பார்க்க என் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, என்னையும் என் பெற்றோர் மற்றும் என் முதலாளியையும் அவதூறாகப் பேசினார். இதனால், என் வேலை பறிபோனது. என் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.மனுவுடன் இணைக்கப்பட்டு இருந்த வீடியோக்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:விவாகரத்தான கணவர் தான் அந்தப் பெண்ணின் அலுவலகத்தில் கேலி செய்யப்பட்டு இருக்கிறார் என்பது மனுதாரர் தாக்கல் செய்துள்ள வீடியோக்களிலேயே தெளிவாக தெரிகிறது. பொய் குற்றச்சாட்டு கூறி நீதிமன்ற பணி நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதில், 25,000 ரூபாயை அந்தப் பெண்ணின் முன்னாள் கணவருக்கும், மீதித் தொகையை நான்கு வாரங்களுக்குள் டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நல நிதியில் செலுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் விடுதலை செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி