பெண்ணை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
பாலக்காடு: பாலக்காடு அருகே பெண்ணை கொலை செய்த குற்றவாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், திருத்தம்பாடத்தை சேர்ந்தவர் சஜிதா, 35. இவர், 2019 ஆக., 31ல் அப்பகுதியை சேர்ந்த செந்தாமரை, 53,என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். நெம்மாரா போலீசார், செந்தாமரையை கைது செய்தனர். விசாரணையில், செந்தாமரையின் மனைவி பிரிந்து சென்றதற்கு, சஜிதா தான் காரணம் என்ற சந்தேகத்தில் கொலை செய்தது தெரிந்தது. இந்த வழக்கில், ஜாமினில் வந்த செந்தாமரை, 2025 ஜன., 27ல் சஜிதாவின் கணவர் சுதாகரன், 55, அவரது தாய் லட்சுமி, 72, ஆகியோரை வெட்டி கொலை செய்தார். செந்தாமரை, விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சஜிதா கொலை வழக்கில், பாலக்காடு நான்காவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கொன்னத்து ஜார்ஜ், செந்தாமரைக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 3.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.