புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியம்
பெங்களூரு: புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் பெண்களின் பாதுகாப்புக்காக, பப்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் திட்டம் வகுத்துள்ளன.ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க பெங்களூரு மக்கள் தயாராகின்றனர். பிரபலமான ஹோட்டல்கள், பப்கள், ரெஸ்டாரென்ட்களில் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமான வர்த்தக பகுதிகளில், இப்போதே அலங்காரம் செய்யப்படுகின்றன.டிசம்பர் 31ம் தேதி இரவு முதல், ஜனவரி 1ம் தேதி அதிகாலை வரை, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்புக்கு, முக்கியத்துவம் அளிக்கும்படி உள்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே பப்கள், ரெஸ்டாரென்ட்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.ஒவ்வொரு முறை புத்தாண்டு கொண்டாடும்போதும், பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சம்பவங்கள் நடக்கின்றன. இரவு முழுதும் பார்ட்டி நடத்தி, குடிபோதையில் சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக நடப்பது, குடிபோதையில் பைக், கார் ஓட்டுவதால் விபத்துகள் நடக்கின்றன.இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, இம்முறை பப், ரெஸ்டாரென்ட் நிர்வாகத்தினர், வாடகை கார் வசதியை செய்கின்றனர். பார்ட்டிக்கு புக்கிங் செய்யும் போதே, வாடகை கார்களையும் புக்கிங் செய்து கொள்ளலாம். புத்தாண்டு நிகழ்ச்சி முடிந்த பின், பெண்களை பாதுகாப்பாக அனுப்ப, வாடகை கார் வசதி செய்யப்படுகிறது.