| ADDED : பிப் 22, 2024 07:18 AM
பெங்களூரு: “தொழிற்சாலைகள் அமைய நிலம் வழங்கிய விவசாய குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்,” என, அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதியளித்தார்.கர்நாடகா மேலவையில் காங்கிரஸ் எம்.எல்.சி., அனில் குமார் பேசியது:கோலார், சிக்கபல்லாப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க அரசின் உத்தரவாதம் தேவை.வேம்கல், நரசாப்பூர், மாலுார் ஆகிய இடங்களில் அமைய உள்ள தொழிற்பேட்டைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிற்சாலைகள் அமைக்க விவசாயிகளிடம் எவ்வளவு நிலம் அரசு கையகப்படுத்தியது? அவர்களுக்கு அரசு அளித்த நிவாரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.இதற்கு பதில் அளித்து, பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் பேசியது:வேம்கல், இரண்டாம் கட்ட தொழிற்பேட்டையில், தொழிற்சாலைகள் அமைக்க 450.37 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு 100 கோடி ரூபாய் வரை பணம் செலுத்தப்பட்டது. நிலுவையில் உள்ள தொகைகளையும் படிப்படியாக வழங்கப்படும்.நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உள்ளூரில் சிலர் குரூப் சி மற்றும் குரூப் டி வேலை வாய்ப்பு மட்டுமே தருவதாக கூறுவது சரியல்ல. உள்ளூர்காரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.