சிறுவன் ஓட்டிய கார் மோதி 600 மீட்டர் இழுத்து சென்றதில் தொழிலாளி பலி
புதுடில்லி: டில்லியில், 16 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது மோதியது. இதில் அவர் சாலையில் 600 மீட்டர் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.டில்லி ராஜா விஹார் பகுதியை சேர்ந்தவர் சுஜித் மண்டல், 32. இவர் பாட்லி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 23ம் தேதி சாலையில் சுஜித் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த சிவப்பு நிற, 'ஹுண்டாய் ஐ10' கார் சுஜித் மீது மோதி, அவரை 600 மீட்டர் தொலைவுக்கு இழுத்து சென்றது. இதில், பலத்த காயம் அடைந்த சுஜித் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், 16 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் சுஜித் மீது மோதியது. காருக்கு அடியில் உடல் சிக்கியிருப்பதை அறிந்தும் காரை நிறுத்தாமல் அந்த சிறுவன் தப்பி சென்றுள்ளார். கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சிறுவனை அடையாளம் கண்டனர். அதில் சிறுவன் டில்லி, ரோஹினி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. பின் அவரை போலீசார் கைது செய்தனர்.